தமிழ்நாட்டில் 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்

108 திவ்விய தேசங்களில் 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.

1. திருவரங்கம்(ஶ்ரீ ரங்கம்)
2. திருக்கோழி(உறையூர்)
3. திருக்கரம்பனூர்
4. திருவெள்ளறை
5. திருஅன்பில்
6. திருப்பேர் நகர்(கோவிலடி)
7. திருக்கண்டியூர்
8. திருக்கூடலூர்
9. திருகவித்தலம்(கபிஸ்தலம்)
10.திருப்புள்ளம்பூதங்குடி
11.திருக்குடந்தை (கும்பகோணம்)
12.திரு ஆதனூர்
13.திரு விண்ணகர்
14.திருநறையூர்(நாச்சியார் கோயில்)
15.திருச்சேறை
16.திருக்கண்ணமங்கை
17.திருக்கண்ணபுரம்
18.திருக்கண்ணங்குடி
19.திருநாகை(நாகப்பட்டினம்)
20.திருத்தஞ்சை மாமணிக்கோயில்
21.திருநந்திபுர விண்ணகரம்(நாதன் கோயில்)
22.திருவெள்ளியங்குடி
23.திருவழுந்தூர்(தேரழுந்தூர்)
24.திருச்சிறுபுலியூர்
25.திருத்தலைச்சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
26.திருஇந்தளூர்
27.திருக்காவளம்பாடி(திருநாங்கூர்)
28.திருசீர்காழி
29.திருஅரிமேய விண்ணகரம்(திருநாங்கூர்)
30.திருவண்புருஷோத்தமம்(திருநாங்கூர்)
31.திருசெம்பொன்செய்கோயில்(திருநாங்கூர்)
32. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்)
33.திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
34. திருவாலியும் திருநகரியும்
35. திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)
36. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
37. திருமணிக்கூடம்(திருநாங்கூர்)
38. திருவெள்ளக்குளம்(அண்ணன் கோயில்)
39. திரு பார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
40. திருசித்ரக்கூடம்(சிதம்பரம்)
41. திருவஹிந்த்ரபுரம்
42. திருக்கோவலூர்
43. திருக்கச்சி(காஞ்சிபுரம்)
44. அஷ்டபுஜம்
45. திருத்தண்கா(தூப்புல்)
46. திருவேளுக்கை(வேளிங்க பட்டரை)
47. திருநீரகம்
48. திருப்பாடகம்
49. திரு நிலாத்திங்கள் துண்டம் (ஏகாம்பரநாதர் திருக்கோயில்)
50. திருஊரகம்(உலகளந்த பெருமாள்)
51. திருவெஃகா
52. திருக்காரகம்
53. திருக்கார்வானம்
54. திருக்கள்வனூர்(காமாட்சி அம்மன் திருக்கோயில்)
55. திருப்பவளவண்ணம்
56. திருப்பரமேஸ்வர விண்ணகரம்(வைகுண்ட பெருமாள்)
57. திருப்புட்குழி
58. திருநின்றவூர்( திண்ணனூர்)
59. திருஎவ்வுள்(திருவள்ளூர்)
60. திருவல்லிக்கேணி
61. திருநீர்மலை
62. திரு இடவெந்தை(திருவடந்தை)
63. திருக்கடல்மல்லை
64. திருக்கடிகை(சோளிங்கர்)
65. திருவயோத்தி(அயோத்தி)
66. திருநைமிசாரண்யம்
67. திருப்பிருதி( ஜோஷிமட்)
68. திருவதரியாச்ரமம்(பத்ரிநாத்)
69. திருச்சாளக்ராமம்(ஸாளக்ராம்)
70. திருவடமதுரை(மதுராபுரி)
71. திருவாய்ப்பாடி(கோகுலம்)
72. திருத்வாரகை(த்வாரகா)
73. திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
74. திருவேங்கடம் (திருமலைதிருப்பதி)
75. திருநாவாய்
76. திருமூழிக்களம்
77. திருவல்லவாழ் (திருவல்லா)
78. திருப்புலியூர் (குட்டநாடு)
79. திருக்குறுங்குடி
80. திருத்தண்கால் (திருத்தண்காலூர்)
81. திருக்கூடல்(கூடலழகர்)
82. திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்)
83. திருமோகூர்
84. திருக்கோட்டியூர் (கோஷ்டிபுரம்)
85. திருப்புல்லாணி
86. திருமெய்யம்


இவ்வாறு நம் பாரதத்தில் உள்ள வைணவத் தலங்களை தன்பாட்டால் பட்டியலிட்டவர் யார் தெரியுமா?

108 திவ்விய தேசங்களில் 86 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.

பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார்.

அவர் ஒன்றும் பிறப்பால் பிராமணன் அல்ல - பிறப்பால் வைணவன் அல்ல.

சத்திரிய குலத்தில் பிறந்து - சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றவன் - தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று, சோழ மன்னருக்கு பெரும் வெற்றிகளை தேடித்தந்தவன். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான். அவன் தான் திருமங்கையாழ்வார்.

இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள், குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார், விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது.

நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார். பெண்ணோ பிராமணப் பெண், இவர் கள்ளர் ஜாதி இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.

பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள். அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான.

சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார். திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க.

அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள், பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர், பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது, தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது - கடுமையான பணத்தட்டுப்பாடு .

பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார் - வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹூட் அவர் _ நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார் - அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார் - இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார்.

புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள் -

இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார் - பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார் - கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை - பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார்.

'சரியான கலியனப்பா நீ' என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார், பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது - என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை -

பரகாலன் 'யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்' என்று அதட்ட- நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார் - ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது -

உடனே அவர் பாடிய பாசுரம்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே

திருமங்கை ஆழ்வார் பிரபந்தத்தில் - பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்கிற வகைகளில் 1137 பாசுரங்கள் தந்துள்ளார் - திருவரங்கன் ஆலயத்திற்கு சுற்றுச்சுவர் கட்டியவனும் இவனே - எதற்கு இந்த நீண்ட பதிவு தெரிந்த வரலாறு தானே என்று நினைப்பவர்களுக்கு இது கிட்டடத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு இம்மண்ணில் நிகழ்ந்த உண்மை வரலாறு - அவ்வரலாற்றின் சாட்சிகளான 1137 பாசுரங்களும்.

84 வைணவத் தலங்களும் இன்றும் இந்த பெரியார் மண்ணில் இருக்கின்றன -
காலம் காலமாக இது ஆன்மீக பூமி தான் சனா தான தர்மம் தான் இந்த மண்ணின் சொத்து.

இது பெரியாழ்வார் வாழ்ந்த மண் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.




No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...