அவந்திபுரம் எனும் ஊரில் வாழ்ந்தவன் சேனா; கிருஷ்ண பக்தியில் சிறந்தவன். அரண்மனையில் பணி புரிந்த சேனா… மன்னரின் உடலில் எண்ணெய் தேய்ப்பது, அவரின் உடம்பை மென்மையாகப் பிடித்து விடுவது போன்ற பணிவிடைகள் புரிந்து வந்தான்.
இதற்காக அரசர், அவனுக்கு மானியம் கொடுத்திருந்தார். தவிர, சில விசேஷ நாட்களில் கூடுதலாக வெகுமதிகள் வழங்குவதும் உண்டு.
நாட்கள் ஓடின. ஒரு கட்டத்தில்… அரசருக்குப் பணிவிடை செய்வது போக மற்ற நேரங்களில், கிருஷ்ணர் வழிபாட்டில் நாட்டம் செலுத்தினான். நாளாக நாளாக அவனது பக்தி அதிகரித்தது.
சேனா, மன்னனின் நல் அபிப்பிராயத்தையும் பெற்றிருந்தான். இது, சேனாவுடன் பணிபுரியும் ஊழியன் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ‘சேனாவைப் போலவே தானும் மன்னரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அவரிடம் பொன்னும் பொருளும் பரிசு பெற வேண்டும்!’ என எண்ணினான். ‘அரண்மனையில் இருந்து சேனாவை வெளியேற்றினால் தான் தனது விருப்பம் பூர்த்தியாகும்’ என்று கருதியவன், அந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தான்!
இந்த நிலையில், அரசருக்கு எண்ணெய் தேய்த்து விடும் நாட்கள் குறித்த கால அட்டவணை ஒன்றைத் தயாரித்து சேனாவிடம் வழங்கியிருந்தார் அரண்மனைக் காரியதரிசி ஒருவர். இதில் குறிப் பிடப்பட்ட நாட்களில் அரண்மனைக்குத் தவறாமல் சென்று, செவ்வனே பணியாற்றி வந்தான் சேனா!
ஒரு நாள், மன்னருக்கு உடலெல்லாம் வலி. எண்ணெய் தேய்த்து உடம்பைப் பிடித்து விட்டால் இதமாக இருக்கும் என்று எண்ணினார் அவர். எனவே, சேனாவை அழைத்து வருமாறு அவனது வீட்டுக்கு சேவகன் ஒருவனை அனுப்பினார்.
அன்றைய தினம், அட்டவணைப்படி அரசருக்கு எண்ணெய் தேய்க்கும் நாளல்ல என்பதால், பூஜையில் அமர்ந்திருந்தான் சேனா. இந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சேவகன், மன்னரின் கட்டளையை சேனாவின் மனைவியிடம் தெரிவித்தான்.
அவளுக்கு ஆச்சரியம். ‘அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்கள் தவிர மற்ற நாட்க ளில் மன்னர் எண்ணெய் தேய்த்துக் கொள்ள மாட்டாரே… இது, எவரோ செய்யும் சூழ்ச்சி!’ என்று எண்ணியவள், ‘அவர் வீட்டில் இல்லை’ என்று அனுப்பினாள்.
பொறாமைக்கார ஊழியனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. ‘இதுதான் தருணம்!’ என்று கருதியவன் மன்னனிடம் வந்தான். ”மன்னா, சேனா வீட்டில் இருந்து கொண்டே ‘இல்லை’ என்று கூறி அனுப்பி இருக்கிறான். செய்யும் தொழிலில் அவனுக்கு அக்கறை இல்லை!” என்று பலவாறு கூறி, மன்னரின் மனதில் கோபத்தை உண்டாக்கினான்.
அவனது திட்டம் வேலை செய்தது. கோபம் கொண்ட அரசன், சேனாவைக் கைது செய்ய உத்தரவிட்டார். காவலர்கள் கிளம்ப யத்தனிப்பதற்குள் உள்ளே நுழைந்தான் சேனா. நேராக மன்னனிடம் வந்தவன், ”மன்னா! இன்று உங்களுக்கு எண்ணெய் தேய்க்கும் நாள் இல்லை என்பதால், வெளியே சென்றிருந்தேன். வீடு திரும்பியதும், தகவல் சொன்னாள் என் மனைவி. உடனே கிளம்பி வந்து விட்டேன்” என்றான்.
இதைக் கேட்டதும் மன்னரது கோபம் தணிந்தது. பொறாமைக்கார ஊழியனை வெளியே போகச் சொன்னார். பிறகு, மன்னருக்கு எண்ணெய் தேய்க்கத் துவங்கினான் சேனா. மிகவும் இதமாக உணர்ந்தார் மன்னர். அவரின் தோள்பட்டையை, சேனா மெள்ள தடவி விட்ட போது ஒட்டுமொத்த வலியும் பறந்தோ டியது. சேனா, மன்னரின் தலையில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தான்.
‘இன்று, சேனா எண்ணெய் தேய்த்து விடும் பாங்கு வித்தியாசமாக இருக்கிறதே!’ என்ற சிந்தனையுடன், அருகில் இருந்த எண்ணெய்க் கிண்ணத்தை யதேச்சையாகக் கவனித்த மன்னர் அதிர்ந்தார்! கிண்ணத்தில் இருந்த எண் ணெய் பரப்பில் பாண்டுரங்கனின் பிம்பம்! ‘மனப் பிரமையோ’ என்று குழம்பியவர் கண்களை நன்றாகக் கசக்கி விட்டு மீண்டும் பார்த்தார்… சந்தேகமே இல்லை; பகவான்தான்! ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருசேர, எண்ணெய் தேய்க்கும் சேனாவின் பக்கம் திரும்பினார். அவன் இல்லை! ‘அப்படியெனில்… இவ்வளவு நேரம் எண்ணெய் தேய்த்து விட்டது யார்?’ என்று வியந்த மன்னர், தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு சேனாவின் இல்லத்துக்கு விரைந்தார்.
வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம் முன் அமர்ந்து, ‘பகவான், துகில் தந்து திரௌபதியின் மானம் காத்த’ சம்பவத்தைப் படித்துக் கொண்டிருந்தான் சேனா. அவன் பூஜையறையை விட்டு வெளியே வரவே இல்லை என்பதை, அறிந்தார் மன்னர். அவரது வியப்பும் மேலும் அதிகரித்தது. சற்று நேரத்தில் பூஜை முடிந்து, வெளியே வந்த சேனா, மன்னர் நிற்பதைக் கண்டு அதிர்ந்தான். அவனை ஆறுதல் படுத்திய மன்னர், நடந்ததை விவரித்தார். அதைக் கேட்டு மெய்சிலிர்த்த சேனா, ”அரச தண்டனையில் இருந்து என்னைக் காப்பாற்ற, பகவானே என் வடி வில் வந்து பணி விடை செய்திருக்கிறார்!’ என்று கண்ணீர் விட்டு அழுதான்.
மன்னரின் கண்களிலும் நீர்! ”பகவான் எனக்கு பணிவிடைகள் செய்தததுடன் தரிசனமும் தந்தருளியதற்குக் காரணமான நீயே என் குரு!” என்று சேனாவை வணங்கினார். இதன் பிறகு, பகவான் தரிசனம் தந்த பொற்கிண்ணத்தை, பகவானுக்கே காணிக்கையாக்கிய மன்னர், ஸ்ரீபண்டரி நாதனை பூஜித்து, அவன் புகழ் பரப்புவதையே லட்சியமாகக் கருதி வாழ்ந்தார்.
No comments:
Post a Comment