சிவபக்தன் ஒருவன், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்தான். அவனது ஆயுட்காலம் முடிந்ததும், சிவ கணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.
மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல், தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக் காட்டினார் சிவன்.
கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடம் இருப்பதைச் சுட்டிக் காட்டிய சிவன்,“பக்தனே... எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப் பார்” என்றார்.
உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது. “ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன்.
“சுவாமி....தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்கு பின்னால் உங்களின் காலடிச் சுவடு தெரியவில்லை. அந்த காலம் நான் துன்பப்பட்ட நேரமாக இருந்ததை என்னால் உணர முடிகிறது.
மகிழ்ச்சியில், உடனிருக்கும் நீங்கள் துன்பத்தில் காணாமல் போனது நியாயமா? இதற்காகவா நான், இமைப்பொழுது கூட மறக்காமல் தினமும் பக்தியுடன் சிவபுராணம் படித்தேன்” கேட்டான்.
அதைக் கேட்டு பலமாக சிரித்தார் சிவன்.
“அட... பைத்தியக்காரா! எப்போது நான் உன்னை தனியாக விட்டேன். முன் வினைப்பயனால் நீ கஷ்டப்பட்ட காலத்தில் கூட, உன்னைத் துாக்கிக் கொண்டு நடந்தேன். துன்ப காலத்தில் தெரிவது உன் காலடிகள் அல்ல. உன்னை தோளில் சுமந்து கொண்டு நடந்த என் காலடித் தடங்கள்” என்றார்.
பரவசம் அடைந்த பக்தன், 'நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! ' என சிவபுராணம் பாடி சிவனை வணங்கினான்.
No comments:
Post a Comment