கல், மரம், உலோகம், சுதை போன்றவை இல்லாமல் பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு ஆகியோருக்குக் கோயில் கட்டினான் விசித்திரச் சித்தன் என்ற பல்லவ மன்னன் என வடமொழிக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. கோபுரம் இல்லை. விமானம் இல்லை. கொடிமரம் இல்லை. ஆனாலும், உருவாக்கியவரின் பெயர் தெரியும் வகையில் கோயில் ஒன்றுள்ளது.
பல்லவர்கள் தொண்டை நாட்டில் வளமான முதிர்ந்த பாறைகள் கொண்ட, மக்கள் எளிதில் செல்லக்கூடிய இடங்களிலெல்லாம் அற்புதமான கலைக் கோயில்களை உருவாக்கினார்கள். அவற்றில் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லத்தில் அமைந்துள்ள கோயிலும் ஒன்றாகும். “வல்” என்றால் உறுதியான என்பதும் “அம்” என்றால் அழகிய என்றும் பொருள். அழகிய, உறுதியான இம்மலையில் சுமார் 1300 ஆண்டுகட்கு முந்திய குடைவரைக் கோயில் உள்ளது. வரை என்றால் மலை என்று பொருள். மலையைக் குடைந்து அமைக்கப்பட்டால் அவை குடைவரைக் கோயில்கள் என்று அழைக்கப்பட்டன.
முடிவுக்கு வந்த சாபம்
வேதங்கள் நான்கும் மலை வடிவம் பெற்று வேதகிரி என்னும் இடத்தில் இருக்கும் இறைவனை அனுதினமும் வணங்கி சாப விமோசனம் பெற வேண்டி, வல்லத்தை அடிவாரமாகக் கொண்டு தவம் இருந்தனவாம். பிரம்மாவின் இரண்டு மகன்கள் கழுகுகளாக மாறி விமோசனத்திற்காக இங்கே தவம் செய்து காத்திருந்தனராம். உரிய காலமும் வந்தது.
இம்மலை வனப்பகுதியில் சிலாரூபமாக திருமால் துணைவியருடன் கோயில் கொண்டுள்ளார். திருமாலின் இந்த வனம் இணைந்த மலையை, வேதகிரியின் மீது எடுத்து வைத்தாராம் சிவபெருமான். சிவ பாதம் பட்டதால் வேதத்தின் கர்வமும் சாபமும் முடிவுக்கு வந்தன. கழுகுகளும் சிவ தரிசனத்தால் மோட்சம் பெற்றன. இங்கு உறையும் ஈஸ்வரன் வேத-அந்த-ஈஸ்வரன் வேதாந்தீஸ்வரன் எனப் பெயர் பெற்றார்.
கல்வெட்டுகள் தெரிவிக்கும் உண்மை
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், சிற்றரசன் வசந்தப்பிரியன் என்பவனைக் கொண்டு திருமால், சிவன் ஆகியோருக்குக் குடைவரைக் கோயில் எடுக்க உத்திரவிட்டான். அதற்கு வசந்தீஸ்வரம் எனப் பெயரிட்டான். மலைக்குக் கீழே சிவனுக்கான குடைவரையை லக்கன் சோமயாஜி என்பவன் எடுத்தான். அங்கு குடியிருந்த திருமால் கரிவரதராஜப் பெருமாள் என்பவருக்கான குடைவரையை பல்லவப் பேரரசன் மகள் கொம்மை செய்திருக்கின்றார் எனக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கீழே அமைந்துள்ள குடைவரையில் சிவலிங்கத்தின் பாணம் மட்டும் உள்ளது, அதன் வலப்புறம் பத்மத்தில், கமல வினாயகர் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளார்.
கரிவரதராஜப் பெருமாள் குடைவரை உள்ளே பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். கருவறையின் இடப்புறத்தில் மகிஷத் தலைமீது இல்லாமல் துர்க்கை நின்ற நிலையில் காட்சி அளிக்கிறாள்.
மூன்று குடைவரைக் கோயில்களில் மூன்று மூல மூர்த்தங்கள், இரண்டு பிரதான தெய்வங்கள் உள்ளன.
Cave Temple |
No comments:
Post a Comment