27 நட்சத்திரங்களுக்கும் ஒரே பரிகார தலம்

தனித்தன்மைமிக்க திருத்தலமாக விளங்கும் நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோவில் 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு அகிலம் எல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனின் திருமாளிகைகள்தான். ஆனாலும், அவற்றிலெல்லாம் வேறுபட்டு, தனித்தன்மைமிக்க திருத்தலமாக நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. வளத்தாலும், வனத்தாலும் எழில்பொங்கும் ஜவ்வாது மலையில் பிரவாகமாகி, வங்கக்கடலில் சங்கமமாகும் செய்யாற்றின் கரையோரமாக இக்கோயில் உள்ளது. மலையே மகேசனாக அருள்தரும் திருவண்ணாமலையில் கலசப்பாக்கம் அருகே வில்வாரணி நட்சத்திரகிரியின் மலையின் நாயகனாக வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி  அருள்பாலிக்கிறார்.

முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில் கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருகின்றனர். 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும், முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலை தவிர வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில். எனவேதான் இக்கோயிலுக்கு நட்சத்திர கிரி கோயில் எனும் சிறப்பு பெயரும் வந்தது. 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் ஆகியன இக்கோயிலின் ஆன்மிக வரலாற்றை விளக்குகின்றன.

சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும். எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து சேருங்கள்’ எனக்கூறி அருள்புரிந்தார்

கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோயிலின் தல விருட்சமான வில்வமரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவோருக்கு, குழந்தைப்பேறு கிடைக்கிறது. திருமணத் தடை நீங்கும். துயரம் தீரும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான மலேசிய முருகர் சிலை வழிபடுவோரை வியப்பில் ஆழ்த்துகிறது. இக்கோயில் திருவண்ணாமலைவேலூர் சாலையில் கலசப்பாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவிலும், போளூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...