காந்தாரியின் கனவு

காந்தாரியின் கனவு

“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா! நீ பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா? நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா? ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? 

நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது. இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்! உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது! இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!”

என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள். லோகநாயகன், ஜகத்ரக்ஷகன், புருஷோத்தமன் என தானே தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்குத் தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள். எனினும், அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும் போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத் தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள். கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க

“எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? வாய்க்கு வாய் நான் உன் பக்தை எனச் சொல்வாயே? இது தான் உன் பக்தரக்ஷண லக்ஷணமா?”
“காந்தாரி இன்னும் கோபம் தீரவில்லையோ?”
“என் நூறு புதல்வர்கள், கோடி வீரர்கள், பல கோடி குதிரை, யானை என இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?
“என் முடியாது? தடுத்திருக்க முடியும். அல்லது அனைத்தையும் என் ஸங்கல்பத்தாலேயே நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்க முடியும்”
“பிறகு ஏன் செய்யவில்லை?

“காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்! இந்த யுகம் பாரதப்போரோடு முடிகிறது. ஸம்பவாமி யுகே யுகே என்பது படி, புது யுகம் பிறக்க, பழையது அழிய வேண்டும். பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது. அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. அந்தகம் நிறைந்த இந்த மாளிகையில் ஒரே ஒரு அகல் விளக்கு விதுரன் மட்டுமே. அவன் மட்டுமே என்னை பூரணமாக அறிவான்”
“கிருஷ்ணா! உன்னை நான் இன்று அறிந்து கொண்டேன். நீயும், விதுரனும் பக்ஷபாதம் கொண்டவர்கள்” “காந்தாரி! என் பக்தனை நிந்தித்தால் வரும் பாவம் என்னை நிந்திப்பதினும் கொடியது. அதனால் தான் இன்று உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னுடைய இந்த கேள்விக்கு நான் விடைகூறுமுன் நீ பதில் சொல்.

முதலில் ஏன் நீ உன் கணவனைச் சபிக்கவில்லை? சக்கரவர்த்தி நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது. பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப்பாசம் அல்லவா? நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு! ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை நீ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருப்பாயா?

பிறகு, பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின் தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே? மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் என்ற போர்வையில் துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களைச் சபிக்க முடியாது என்ற எண்ணமோ?

உன் மகன்? தன் சகோதர்களையே அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே “மடியில் வந்து அமர்வாய்” என விளித்து மாபாதகம் செய்தானே? மேலும், “ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:” என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன் தன் சுயநலத்திற்காக அவர்களைப் பலி கொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை? பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கே போனது? அவனைக் கேட்டாயா?
ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன்தான் உண்மையில் உடன்பிறந்தவள் குடும்பத்தை கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன். “கிருஷ்ணா! சகுனி என் சகோதரன். மேலும், நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?

“பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு சொந்தமில்லையா? பாண்டவர் என்னை சொந்தமெனக் கொண்டனர். அதனால் பிழைத்தனர்.

“கபடனே! குந்தி உன் சொந்த அத்தை. அதனால் தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்” “பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு.

“சரி அதைவிடு காந்தாரி! பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ அதை துரியோதனாதிகளைச் செய்ய விட்டாயே?

“கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என நினைப்பது தவறா?”
“அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ! எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்”. என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏன் என எண்ணிப்பார்.

“என் 100 பிள்ளைகளையும் கொன்றுவிட்டாயே? இனி நான் எண்ணிப்பார்க்க என்ன இருக்கிறது?
“அப்படியில்லை. நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன்.
கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள்
பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன்.

இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை”
மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து வானரர் உதவியோடு இராவணனை அழிக்க நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன். ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை.
போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கும்?
மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?
“எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?”
“அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. உன் மகன் தான் நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன் திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை.
“கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?”
“காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்”
“பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?”
“ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும் அது மிக மிகக்கொடுமையான பாவம்”.
“கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். ஆனால் என் சக்திக்கு ஏற்ற உன்னைச் சரணடையும் ஒரு உபாயம் சொல்வாயா?”
“கலங்காதே! பதினெட்டு அத்தியாயங்களாய் அர்ச்சுனனுக்கு உரைத்ததை ஈரடியில் உனக்குச் சொல்கிறேன்.
அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||

“நீயென்றால் அது நானே. உனக்குள் இருந்து உன்னைப் பேசவைத்தேன். கர்மாவுக்கு பேதம் இல்லை. நான் உட்பட. உன் சாபம் பலிக்கும். என் பழைய பகைவன் வாலியே என்னை அழிக்க வேடனாக வந்து வஞ்சம் தீர்ககப்போகிறான். நான் அழிவற்றவன். அவதாரம் மறையலாம். ஆனால்,
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்ற என் வாக்கிற்கேற்ப நான் என் எண்ணப்படி மீண்டும் மீண்டும் பிறப்பேன்”
“கிருஷ்ணா! அறிவுச்சுடர் ஏற்றியவனே! போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து வடக்கிருந்து உன் நிழல் தேடி வந்து சேர்வேன்”.
இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது. திருதராஷ்ட்ரனைக் கண்டு உடனே கானகம் ஏக முடிவு செய்து மெல்ல அவன் அறை நோக்கி நடந்தாள்.
கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.




No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...