Sri Periya Anjaneyar Temple | Ambur | Vellore District


சனி பகவானை காலால் அழுத்தும் ஆஞ்சநேயர் கோவில் 

ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்.

காலசர்ப்ப தோஷம் அகல, சனி பகவானை, ஆஞ்சநேயர் தன்னுடைய காலால் அழுத்தும் திருக்கோலமே மூலவராக அமையப் பெற்றத் திருத்தலம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்துள்ள கோயிலை. 

மாட்டுப் பொங்கல் நாளன்று இஸ்லாமிய மக்கள் சிலரும் கோயிலுக்கு வெளியே வழிபாடு செய்கிறார்களாம்.

தமிழக இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் பகலில் அன்னதானம் நடக்கிறது. இஸ்லாமிய ஏழை பெண்களும் அங்கு சாப்பிட்டு மனநிறைவடைகிறார்கள்.

இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தன் தவ வலிமையால், அனைத்து கிரகங்களையும் வென்று, தனக்கு அடிமையாக்கி வைத்திருந்தான். சீதையைக் கடத்தி வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் இலங்கை சென்று இதனைக் கண்டறிந்து, ராமபிரானிடம் தெரிவித்தார். சீதையை மீட்க, ராமபிரான் இலங்கை மீது போர் தொடுத்தார்.

உக்கிரமாக நடந்த போரில், இந்திரஜித் தொடுத்த சக்தி அஸ்திரத்தால் இலக்குவன் மயக்கமுற்று வீழ்ந்தான். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். 

அனுமனைத் தடுக்கும் நோக்கில் ராவணன், காலநேமி என்ற அரக்கனை அனுப்பினான். ஆனால், அவனை வதம் செய்தான் அனுமன். எனவே, ராவணன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சனியை அழைத்து, உன் பார்வை பட்டாலே அனுமன் போகும் காரியம் தடைபடும்" என்று சொல்ல, சனி தயங்கினான். கோபமடைந்த ராவணன், துணியால் மூடியிருந்த சனியின் வலது கண்ணைத் திறந்தான். சனியின் முதல் பார்வை ராவணன் மீது விழுந்தது. அதுவே அவனது அழிவுக்கான தொடக்கத்தைச் சொன்னது.

சஞ்சீவி மூலிகையைக் கண்டுபிடிக்கத் தாமதமாகும் என்றபடியால் அனுமன் அந்த மலையையே தூக்கிக்கொண்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இடையில் சனி வருவது அனுமனுக்குத் தெரிந்துவிட்டது. அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியை,  அவன் பார்வை தன் மீது படுவதற்கு முன்பாகவே, அவனை ஒரே அடியில் கீழே சாய்த்து அவன் முகம் தன்னைப் பார்க்காத வகையில் இடது காலால் அவன் தலையை நிலத்தோடு அழுத்திவிட்டான். வலது காலால் சனியின் கால் பகுதியை அழுத்தினான்.

இதனால் வலி தாங்க முடியாத சனி பகவான், தன்னை விட்டு விடும்படி வேண்டியதுடன், ஸ்ரீராமரின் துதியையும் பாடினார். ராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார்.

இனி, எக்காலத்திலும் ராம நாமத்தை சொல்லுபவர்கள் மீது உன் பாதகப் பார்வை படவே கூடாது" என்று அனுமன் கூற, சனியும் ஒப்புக் கொண்டான். அதன் பின்னர் சஞ்சீவி மூலிகையால் இலக்குவன் மயக்கம் தெளிவுற்றதும் போரில், இராவணன் வீழ்ந்ததும் தெரிந்த புராண வரலாறு.

இராவணன், சனியைத் தாக்கிய இடம் பாலாற்றங்கரையில் உள்ள ஆம்பூர் நகரத்தை ஒட்டி இருக்கும் மலைப்பகுதியான ஆனைமடுவில் என்பது அந்தப் பகுதியில் நிலவி வரும் செவிவழிச் செய்தி.

கி.பி. 1486ம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் தளபதியான உத்தர ரங்கனாதன், ஆற்காடு நவாபுடன் போரிட்டான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் உம்மராபாத் என்ற இடத்தில் போர் நடந்தது. போரில் நவாப் தோற்றான். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆம்பூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு கோயிலைக் கட்டினான் உத்தர ரங்கனாதன் என்பது வரலாறு.

அனுமனின் பாதம் இத்தலத்திலும், அருகேயுள்ள ஆனைமலையிலும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆலய அமைப்பு :
ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் அமைப்பில் சுதை வடிவம்கொண்ட எளிய நுழைவாசல் இருக்கிறது. ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில், தலமரமான நெல்லி மரம் காணப்படுகிறது. எதிரே கருங்கல்லில் உருவான தீப தூண் 15 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. கருவறை கோபுரம் ஐந்து கலசங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

ஆலயத்தின் பின்புறம், நான்கு கால் மண்டபத்தில் புடைப்புச் சிற்ப ஆஞ்சநேயர், அவரின் பின்புறம் விஜயநகர பேரரசின் கல்வெட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைக் கல்வெட்டு மண்டபம் என அழைக்கின்றனர்.

கருவறையை நேராக நோக்கினால் மூலவர் தெரிவதில்லை. உற்சவரே அழகுற காட்சி தருகின்றார். வாசல் அருகில் சென்று இடதுபுறம் நோக்கினால், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய கோலத்தில் இருக்கிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும் இந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது.

ஆஞ்சநேயரின் வால், தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சவுகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. ஒளிவீசும் அவரின் கண்கள் காருண்யத்தை வழங்குகிறது. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.

அனுமனின் காலில் உள்ள உருவம் அசுரனுடையது என்ற மற்றொரு கருத்தும் கூறப்படுகிறது. கம்ப ராமாயணத்திலும் கூட இச்சம்பவம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அனுமன் சனியை காலால் மிதித்த இடத்தின் ஐதீகம் இதுவே என்று, இப்பகுதி மக்களும், இங்கு வரும் பக்தர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்று ஆம்பூர் நகரின் நெருக்கடியான பகுதியில் இருக்கிறது அந்தக் கோயில். அவருக்கு, ‘வீர ஆஞ்சநேயர்’ என்றும், ‘பெரிய ஆஞ்சநேயர்’ என்றும் திருநாமம். 

சனியை காலால் அழுத்திக்கொண்டிருக்கும் வீர ஆஞ்சநேயர், சுதை ஆஞ்சநேயருக்கு வலது பக்கத்தில் ஒதுங்கியே நிற்கிறார். மூலஸ்தானத்துக்கு அருகில் வந்தால்தான் வீர ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைக்கும்.

சுதை ஆஞ்சநேயர் இருந்த இடத்தில் முன்பு பாம்பு புற்று இருந்ததாகவும், ஒருமுறை பாலாற்று வெள்ளத்தில் அது கரைந்து போனதாகவும் சொல்கிறார்கள். பின்னர் காஞ்சி மகாபெரியவர் வழி காட்டுதலில் சுதை ஆஞ்சநேயர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டார். கி.பி. 1400களில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொன்னாலும் கி.பி. 242லேயே ஆஞ்சநேயர் சுயம்புவாக அங்கு தோன்றிவிட்டார் என்று கல்வெட்டு இருக்கிறது. சனி பகவானை தனது கட்டுப்பாட்டுக்குள் ஆஞ்சநேயர் கொண்டு வந்த ஸ்தலமாக இருப்பதால், சனி கிரக தோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது. ஹனுமன் ஜயந்தி, ஸ்ரீராமநவமி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.

கோலக்காய், வடை, வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்குப் பிடித்தது என்பதால், தினசரி இவற்றில் ஏதாவது ஒன்றோடு காட்சியளிக்கிறார் ஆஞ்சநேயர். தமிழக இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் பகலில் அன்னதானம் நடக்கிறது. இஸ்லாமிய ஏழை பெண்களும் அங்கு சாப்பிட்டு மனநிறைவடைகிறார்கள்.
தொடர்புக்கு: 9443966433

வழிபாட்டு பலன் :
சனிதோஷம் உள்ள எவரும் இத்தலம் வந்து பெரிய ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றால், தொல்லைகள் நீங்கி சுகம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு போன்றவற்றிற்கும் இந்த ஆஞ்சநேயர் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், 
மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 
சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :


வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது, ஆம்பூர் நகரம். ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தும், ஆம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் இருக்கிறது.


ஸ்ரீ ராமபக்த அனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்.

No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...