யார் இந்த விதுரர்? மஹாபாரதப்போர்

மஹாபாரதப்போர்! 18 நாள் யுத்தம்! வெற்றி பாண்டவர்களுக்கு!
ஆனால், ஒரு விஷயம்...
கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்... இவர்களை எப்படிப் பாண்டவர்கள் வென்றார்கள்...?
ஸ்ரீ கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
1) ஜயத்ரதன்
2) பீஷ்மர்
3) துரோணர்
4) கர்ணன்
5) துரியோதனன்
6) விதுரர்

இவர்களின் வீழ்ச்சிக்காகக் ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது. இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா? அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள். இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம்.

இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்... ஆனால் சரியான விடை...


விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது. 'இது என்ன புது குழப்பம்? விதுரர் எங்கே சண்டை போட்டார்? அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்?' என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன். யுத்தம் நடக்கும் முன்பு நடந்த சம்பவங்களை பார்ப்போம்... முதலில் விதுரரை பற்றி தெரிந்து கொள்வோம்...

யார் இந்த விதுரர்?
விதுரர், திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி. அதாவது, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா... விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர்.


விதுரர் மகா நீதிமான்... தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்... தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்... 'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது. திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள்...

அதற்கான தண்டனை தான்...
விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி. கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது. எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.


ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும் வீழ்த்தவே முடியாது...
விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது... யுத்தம் என்று வந்தால்... மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும்.


அதனால்... எல்லோரையும் விட மிக முக்கயமான நபர்... விதுரர் தான்.
அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது. மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது. விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார்.

அதன்படி, பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார். 'கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும்... திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார். துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது.
நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்...” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம்...

தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார். விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார். மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக. வாதாடினார்.

துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது..." என்று சொல்லி கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான். கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.

வழியில்... கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்?” என்றான். கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார் அதேபோன்று... அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்...' என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது.
ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது... பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து உபசாரம் செய்தது...

என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது... இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது... என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

குறிப்பாக அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். இதனால், விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்... ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

"உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!... இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்... . அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்... எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை...” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார். யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை...

இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று... தங்காமல் இருந்தால்... விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா? துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா?
விதுரர் வைத்திருந்த 'வில்' தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்... 'கோவர்த்தன் எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது. அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. 'காண்டீபம்' என்பது அதன் பெயர். போரில் விதுரர் கோவர்த்தன வில்லுடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!


இதுவே பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது...! தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற *தர்மம்* உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...!
ஆக... *தர்மம் தலை காப்பது மட்டுமல்லாமல்...* *தர்மத்தை யாராலும் வெல்லவும் முடியாது*


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...