Govardhana Girivalam | கோவர்தன கிரிவலம்

கோவர்தன கிரிவலம்


நாம் கோவர்தன கிரிவலம் மேற்கொள்வதன் மூலமாக கிருஷ்ணர்மீதான அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். கோவர்தன மலையை வழிபட விரும்புபவர்கள் அதனைச் சுற்றி வலம் வர வேண்டும். கோவர்தன கிரிவலம் 26 கி.மீ. பாதையைக் கொண்டது. 

ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். 

சைதன்ய மஹாபிரபு இம்முறையைக் கடைப்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவர்தன மலையை சுற்றி பல கோயில்களும், குளங்களும் இருப்பதால் கிரிவலத்தை முடிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆகலாம். அப்பாதையில் இருக்கின்ற சில முக்கிய இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது. விருந்தாவனத்தை விட்டு வெளியில் செல்வதற்கு விரும்பாத விருந்தாவனவாசிகளுக்காக கிருஷ்ணர் கங்கையை அங்கே வரவழைத்தார்.

ஹரிதேவரின் கோயில்: கிருஷ்ணர் இங்கு நாராயண ரூபத்தில் வீற்றிருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே. சைதன்ய மஹாபிரபுவும் நித்யானந்த பிரபுவும் இவ்விக்ரஹத்தை தரிசித்து நடனமாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை பிரார்த்தனை செய்து நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.

சகலேஸ்வர மஹாதேவர்: ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடிலுக்கு அருகில் சகலேஸ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் சிவாலயம் அமைந்துள்ளது. விருந்தாவனத்தின் பிரதான பஞ்ச சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று. ஸநாதன கோஸ்வாமி கொசு தொல்லையினால் இவ்விடத்தை விட்டு செல்வதற்கு நினைத்தபோது, சிவபெருமான் பிராமணரின் உருவத்தில் வருகை புரிந்து, கொசுத் தொல்லை இனி இங்கு இருக்காது என உத்திரவாதம் அளித்தார். இப்போதும் இவ்விடத்தில் கொசுக்கள் இருப்பதில்லை.

லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர். இதற்கு அருகில் இருக்கும், தான-கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.

அனியோர்: சமோசா, கச்சோரி, சாதம், பூரி, இனிப்பு, காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது. கிருஷ்ணர் அனைத்து அன்னத்தையும் உண்ட பிறகு, இன்னும் வேண்டும் என்று கேட்டதால், அனியோர் என்று இவ்விடம் அழைக்கப்படுகின்றது. இவ்விடத்திற்கு அருகில் கோபால-ப்ரக்ருத-ஸ்தலி அமைந்துள்ளது. 500 வருடங்களுக்கு முன் மாதவேந்திர புரி இங்கு கோபால விக்ரஹத்தை கண்டெடுத்தார். ஜெட்டி புரா என்னும் இவ்விடத்தில் மாதவேந்திர புரி சிலகாலம் தங்கியிருந்தார்.

ராகவ பண்டிதரின் குடில்: அப்சர குண்டத்தின் அருகில் சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய சகாவான ராகவ பண்டிதரின் பஜனை குடில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் இருக்கும் கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளது.

ராதா குண்டம்: இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது ராதா குண்டம். ஸ்ரீமதி ராதா ராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ஸ்ரீமதி ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கௌடீய வைஷ்ணவர்களின் பிரோயஜன ஆச்சாரியர் (இறுதிக் குறிக்கோளை எடுத்துரைக்கும் ஆச்சாரியர்) என்று அழைக்கப்படும் ரகுநாத தாஸ கோஸ்வாமியின் பஜனைக் குடிலும் சமாதியும் இக்கரையோரத்தில் அமைந்துள்ளன. ராதா குண்டத்தின் கரையோரத்தில், ரகுநாத தாஸ கோஸ்வாமியிடமிருந்து தினந்தோறும் பல மணிநேரம் சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளைக் கேட்ட பிறகே, கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்றினார்.

சியாம குண்டம்: கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன. மஹாபிரபு இக்கரையோரத்தில் தமல மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறியதால், பைடக என்றும் இவ்விடம் அழைக்கப்படுகிறது.

குசும சரோவர்: இவ்விடத்தில் கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். சைதன்ய மஹாபிரபு இங்கு நீராடியுள்ளார். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தார்.




No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...