Uruvaththai vaiththu oruvarai edai potakutathu |உருவத்தை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது


மதியரசன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவர் தனது நாட்டின் வணிகம் தொடர்பாக வேறு நாட்டிற்கு தனது சேவகனுடன் சென்றிருந்தார். சில நாட்களுக்கு பின் மதியரசரும் அவரது சேவகனும் குதிரை வண்டியில் தங்களது நாட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வரும் பாதையிலோ வீடு எதுவும் இல்லை. நீண்ட தூர பயணத்தால் அரசருக்கு தாகம் எடுத்தது. அவர்கள் கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்துவிட்டது. நீண்ட தூரத்திற்குப் பிறகு ஒரு காட்டின் வேலியில் வெள்ளரிப்பழம் இருந்ததை அவர்கள் பார்த்தனர். மன்னர் சேவகனிடம் அந்த வெள்ளரிப்பழத்தை பறித்து கொண்டு வா என்று கூறினார். மன்னரின் கட்டளைப்படி சேவகனும் வெள்ளரிப்பழத்தை பறிக்கச் சென்றான்.

அப்போது அது 'வெள்ளரிப்பழம் இல்லை" என்று ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டது. அக்குரல் யாருடையது என்று இருவரும் திரும்பி பார்த்தனர். அதுவோ பார்வையில்லாத ஒரு பிச்சைக்காரனின் குரல். அரசரும் சேவகனும் திகைத்துப் போனார்கள். ஆனால் அரசர் அவன் கூறியதை நம்பாமல் சேவகனை அப்பழத்தை பறித்து வருமாறு கூறினார்.

தாகத்தால் அதை உடனே கடித்து உண்டார். வாயில் வைக்க முடியாத அளவிற்கு கசப்பாக இருந்தது. உடனே பிச்சைக்காரனிடம் சென்று அது எப்படி பார்வையில்லாமலே உங்களால் அதை வெள்ளரிப்பழம் இல்லையென்று கூற முடிந்தது என்று கேட்டார்.

பிச்சைக்காரன் ஐயா! இதுவோ அனைவரும் வந்து செல்லும் பாதை. வெள்ளரிப்பழமாக இருந்தால் இதை இன்னும் பறிக்காமல் விட்டு வைக்கமாட்டார்கள். அதனால் தான் என்னால் அறிந்துக்கொள்ள முடிந்தது என்று கூறினான்.

அடுத்த படியாக தண்ணீருக்கு என்ன செய்வது என்று யோசித்தார் அரசர். சேவகன் நான் கிழக்கே சென்று ஏதாவது நீர் நிலைகள் அங்கு இருந்தால் நீர் எடுத்து வருகிறேன் என புறப்பட்டான்.

பிச்சைக்காரன் ஐயா! கிழக்கே சென்றால் நீர் கிடைக்காது. தெற்குப் பாதையில் சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்று கூறினான். பிச்சைக்காரன் கூறியவாறே தெற்கே சென்றதும் அங்கு ஒரு பெரிய குளம் இருந்தது. சேவகனும் தண்ணீர் கொண்டு வந்து அரசனிடம் கொடுத்தான். அதன்பின் அங்கு நீர் இருப்பது எப்படி உங்களுக்கு தெரியும்? என்று மன்னர் கேட்டார்.

ஐயா! தெற்கில் இருந்து வரும் காற்று குளிர்ச்சியாக இருந்ததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அங்கு தண்ணீர் கிடைக்கும் என நினைத்தேன் என்றான்.

உடனே அரசர் இப்படி ஒரு நபர் நமக்கு தேவை என நினைத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு அரண்மணைக்கு ஒரு வைர வியாபாரி வந்தார். மன்னன் அவன் கொண்டு வந்த வைரத்தை எல்லாம் பிச்சைக்காரனிடம் கொடுத்து சோதித்துப் பார்க்கச் சொன்னார்.

பிச்சைக்காரன் அதை இரண்டாகப் பிரித்து தன் கைகளில் வைத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்குப்பின் இடது பக்கம் இருப்பது எல்லாம் வைரம் வலப்பக்கம் இருப்பது எல்லாம் கண்ணாடிக் கல் என்று கூறினான்.

அரசர் அவனிடம் எப்படி கண்டுபிடித்தாய் என்று கேட்டார். ஒவ்வொரு கல்லையும் எடுத்து கையில் மூடி வைத்துப் பார்த்தேன். நமது உடல் வெப்பம் கல்லில் ஏறினால் அது வைரம். உடல் வெப்பம் கல்லில் ஏறாமலிருந்தால் அது கண்ணாடிக்கல் என்று கூறினான். உடனே அரசர் பிச்சைக்காரனுக்கு தனது அரண்மனையில் ஒரு பதவியும் வழங்கினார்.

நீதி :
அறிவும் திறமையும் யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். உருவத்தை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...