Have darshan of Kamakshi! | காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!

காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!



பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை!

அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது! அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.

“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.

“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.
உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.

நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.

“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.

இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !

அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”

“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!

“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!

பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!

உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...