ஒரு படைவீடு மட்டும் எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல்

ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான். ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும். முருக பக்தர்கள் அனைவரும் விரதம் அனுஷ்டித்து, சதா சர்வ காலமும் முருகப்பெருமானின் நினைவிலேயே லயித்திருப்பார்கள். முருகப்பெருமானின் துதிப்பாடல்களைப் பாடுவதும், அவன் குடியிருக்கும் ஆலயங்களைத் தேடித் தேடிச் சென்று தரிசிப்பதுமாக முருகன் நினைவிலேயே நாளும் பொழுதும் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பார்கள்.

சஷ்டியின் நிறைவு நாளான ஆறாவது நாள், உணவும் நீரும் இல்லாமல் சிரத்தையுடன் விரதம் இருந்து, அன்று மாலை சூரபத்மனையும் அவனுடைய சகோதரர்களையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் அற்புதத்தைக் கண்டு மகிழ்வார்கள். அப்போதே அவர்களுடைய மனங்களில், 'இனி தங்கள் வாழ்க்கையில் தொல்லைகளும் துன்பங்களும் தொடராது; தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது' என்ற எண்ணம் ஏற்பட்டு, முருகப்பெருமானை பக்திப் பெருக்குடன் வழிபட்டு, மறுநாள் காலை விரதத்தை நிறைவு செய்வார்கள்.

அனைத்து முருகத் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் அதே தருணத்தில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக இருக்கிறதென்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

அந்தத் தலம்தான் திருத்தணிகை திருத்தலம்! ஐங்கரன் தம்பியின் ஐந்தாவது திருத்தலம் அது! முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால், அங்கே சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. அங்கே அன்பும் கருணையும் மட்டுமே கொண்டு அருள்புரிகிறான். வள்ளியை மணம் புரிந்ததால் ஏற்பட்ட விளைவு அது!

சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், அவனைத் தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகளும், வருத்தும் பிணிகளும் அவன் அருளால் தணிந்து போகின்றன. அதனாலும் இந்தத் தலம் ‘தணிகை’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். முருகப் பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால்தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை. சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் மட்டும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கண்டால் திருமணம் தடைப்படுகிறவர்களுக்குக் கூட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்,

மலைகளில் சிறந்த மலை ’திருத்தணிகை’ என்று போற்றிக் கூறுகிறது கந்த புராணம். திருத்தணிகைக்குச் சென்று முருகப் பெருமானை நினைத்தாலோ அல்லது திருத்தணிகை இருக்கும் திசையில் முருகனை மனதில் நிறுத்தி வணங்கினாலோ, தணிகை இருக்கும் திசையை நோக்கிப் பத்தடி தூரம் நடந்தாலோ வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.

சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்கராயுதத்தை மகாவிஷ்ணு திருத்தணிகை முருகனை வழிபட்டுதான் திரும்பப் பெற்றார் என்கிறது கோயில் தலபுராணம். விஷ்ணு பகவான் உருவாக்கிய விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி, தணிகைமலை முருகனை வழிபட்டால் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும். ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் அமைந்திருக்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த அற்புதமான திருத்தணிகைக் கோயிலில்தான் ஆங்கிலப் புத்தாண்டில் படிபூஜை நடைபெறுகிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் 1917-ல் தொடங்கப்பட்டதுதான் படி பூஜைத் திருவிழா. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு நாளில் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது வழக்கமாக இருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மனம் வருந்தினர். என்ன செய்வது என்று யோசித்தபோது அவர்கள் மனதில், 'புத்தாண்டு தினத்தின்போது துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வழிபடலாம்' என்ற எண்ணம் தோன்றியது. எனவே, புத்தாண்டின்போது திருத்தணிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட அனுமதி தந்தார்கள். அப்படித் தொடங்கியதுதான் திருத்தணிகை படிபூஜை விழா.

ஆங்கில புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானை வேண்டி, கோயிலில் அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழைப் பாராயணம் செய்து வழிபடுவார்கள். இந்தத் திருவிழாவால்தான் முருகப்பெருமானுக்கு ‘தணிகை துரை’ என்ற பெயரும் உருவானது.
திருத்தணி திருத்தலத்தின் சிறப்புகள்...

திருத்தணிகைத் தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தனம் ஆகிய பிரசாதங்கள் தீராத வியாதி களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்பது பக்தர்கள் நம்பிக்கை.

* திருத்தணிகையில் பக்தர்கள் எடுக்கும் காவடி வித்தியாசமாக இருக்கும். நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனைப் பொருள்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம்.

* தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற சரண கோஷத்துடன் பக்தர்களால் சுமந்து செல்லப்படும் 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கண் கொள்ளாக் காட்சி.

* மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

* கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூலவர் உட்பட எல்லா சந்நிதிகளையும் தரிசித்த பிறகு, நிறைவாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

* திருமால் ஆலயங்களைப் போன்று, முருகனின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவது, திருத்தணிக் கோயிலின் தனிச் சிறப்பு.


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...