அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்.

அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்.

ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே, முன்நிறுத்திக்கொண்டவர். ராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். 

அவர் அமர்ந்திருந்த அகோபில தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம் என்பது குறிப்பிடத்தக்கது. தவத்தின் போது அனுமனுக்கு ஒரு ஆசை உண்டானது, தன் நெஞ்சில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும், ராமச்சந்திரமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. 

வேறு என்ன ஆசை ஆஞ்சநேயருக்கு இருந்து விடப் போகிறது. அதே எண்ணத்துடன் ராமரை நினைத்து கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் ராமபிரான்.

மேலும் தன் அன்புக்குரிய அடியவனான அனுமனுடன், சற்று விளையாடவும் நினைத்தார் ராமபிரான். அதன்படி அனுமனுக்கு காட்சி கொடுக்க அவர் முன் தோன்றினார்.

ஆனால் அந்த உருவத்தைப் பார்த்து அனுமன் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனெனில் அனுமன் முன்பு அவர் ராமபிரானாக காட்சி தருவதற்கு பதில், நரசிம்மமூர்த்தியாகவே தோன்றியிருந்தார். 

இதனால் மகிழ்வதற்கு பதிலாக குழப்பத்தில் ஆழ்ந்து போனார் ஆஞ்சநேயர். அத்துடன் ராமரின் முகத்தைக் காணாது, அவரது முகம் வாடிப்போனது. நரசிம்ம மூர்த்தியின் முகத்தை பார்த்த அனுமனின் முகத்தில் கேள்வி ரேகை படர்ந்திருந்தது. அது ‘என் ராமன் எங்கே?’ என்று கேட்பதுபோல் இருந்தது. 

நரசிம்ம மூர்த்தி சற்றே முகம் மலர்ந்து, ‘ராமனும், நானும் ஒருவர்தான்’ என்பது போல் தலையசைத்து புன்னகைத்தார். அது அனுமனுக்கு புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை. 

அழகே உருவான ராமபிரான் எங்கே? பயங்கரத் தோற்றத்துடன் இருக்கும் இவர் எங்கே?’ என்பது போல் எண்ணம் எழுந்தது. ‘விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே’ என்பதை அனுமனுக்கு உணர்த்த எண்ணிய இறைவன் ஒரு காரியம் செய்தார். 

தனது திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தார். பின்னர் ‘நன்றாக என்னை உற்றுப் பார்’ என்று ஆணையிட்டார். அனுமனும் உற்றுநோக்கினார். சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க, கரங்களில் சக்கரம், கோதண்டம், வில், அம்பு தாங்கி அற்புதமாய் காட்சி தந்தார் நரசிம்மர்.

அனுமனுக்கு உண்மை புரிந்தது. நரசிம்மரும், ராமரும் நாராயணரின் அம்சமே என்பதை அறிந்து கொண்டார். கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். அனுமனுக்கு நரசிம்மமூர்த்தி வில்லேந்திய கோலத்தில் காட்சியை, இன்றும் அகோபிலத்தில் தரிசிக்கலாம்.

கருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்ததால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்ற திருநாமம் நிலைபெற்றது.



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...