Madurai Kannagi House | கண்ணகி வாழ்ந்த வீடு

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 

'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக..



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...