விதியை மாற்றுவது என்பது முடியாது

இந்திரன் மனைவி இந்திராணி  ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள். ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டு விட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்து விட்டால் நானும் இறந்து விடுவேன் என்றாள்.
இந்திரன், கவலைப்படாதே இந்திராணி நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன்... ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதி விடுவோம் என்று சொல்லிவிட்டு பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா , இந்திரா... படைப்பது மட்டுமே என் வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்கும் தறுவாயிலிருக்கிறது. அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு

விபரங்களை கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான். உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள் நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார். விஷயம் முழுவதையும் கேட்ட அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில், என்ன கார‌ணத்தால் எடுக்க வேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்க விட்டு விடுவோம். அந்த ஓலை அறுந்து விழுந்து விட்டால், அவரின் ஆயுள் முடிந்து விடும்.

வாருங்கள் அந்த அறைக்கு சென்று கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதி விடுவோம் என்று அவர்களை அழைத்து செல்கிறார். இப்படியாக இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்கு சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாக சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர். அது அந்த கிளியின் ஆயுள் ஓலை. அவசரமாக அதை படித்து பார்க்கின்றனர் அதில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்துவிடும் என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!! விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!
யாருக்கு விதி ...
எங்கே எப்படி முடியும் ...
என்பது எழுதினவனுக்கே தெரியாது என்பதுதான் உண்மை ...!!!



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...