கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா?

மகாபெரியவா சொன்ன தீர்ப்பு!

கணவனை விட்டுவிட்டு மனைவி மட்டும் யாத்திரை போகலாமா? என்றால், கூடாது என்கிறது சாஸ்திரம். ஆனால், அப்படிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது?

பல வருடங்களுக்கு முன் மகாபெரியவா, தன்னை தரிசிக்க வந்த தம்பதிகளுக்குத் தீர்ப்பு சொன்ன சம்பவம் இதோ:

ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு அனுகிரஹம் செய்து கொண்டிருந்த மகாபெரியவரை, நமஸ்கரித்து எழுந்தனர் ஓர் இளம் தம்பதியர். கணவருக்கு சுமார் 25 வயதிருக்கும்.

அவர் மனைவிக்கு 20 வயது இருக்கலாம். இருவரும் பக்தி நிறைந்தவர்கள் என்பது அவர்கள் தோற்றத்திலேயே தெரிந்தது. கை உயர்த்தி ஆசிர்வதித்த மகாபெரியவா, அவர்களைப் பார்த்து, "இருவரும் ஒற்றுமையாக சௌக்கியமாக இருக்கிறீர்களா?" என்று கேட்டார்.

உடனே, "உங்க அருளால, ரொம்ப சௌக்கியமாக இருக்கோம் பெரியவா!" சொன்னார், கணவர். பெரியவா விடவில்லை. "நீ சொல்லிவிட்டாய். உன் ஒய்ஃப் வாயே திறக்கலையே!" என்று சிரித்தார்.

உடனே அந்த இளம் மனைவி சுதாரித்துக்கொண்டு, "எம் பெரு அலமேலு பெரியவா...நாங்க ஒற்றுமையா சந்தோஷமாகத்தான் இருக்கோம்..!" சொன்னார்.
"இல்லை. சந்தோஷமா இருக்கறதா உன் வாய்தான் சொல்கிறது. ஆனா, ஏதோ மன வருத்தம் இருப்பதை உன் குரல் சொல்கிறதே...அது என்ன?" அன்போடு விசாரித்தார், சுவாமிகள்.

"பெரியவா எனக்கு கோயில் கோயிலா போய் சுவாமியை தரிசிப்பது ரொம்பப் பிடிக்கும். கல்யாணத்துக்கு முன்னால நெறைய க்ஷேத்திரங்களுக்கு பெற்றவர்களோடு போயிருக்கிறேன். ஆனால், இவரோடு எனக்குக் கல்யாணமாகி இந்த ஒருவருஷமா எந்தத் தலத்துக்கும் போகவே இல்லை. அதான்...!" தயங்கினார் அந்தப் பெண்.

"ஏன் போக முடியலே?" என்று கேட்டார் மகான்.
"கல்யாணத்துக்குப் பிறகு நான் தனியாகப் போக முடியாதே! இவரும் கூட வந்தாத்தானே பலன் கிடைக்கும்; ரெண்டு மூணு தடவை கூப்பிட்டேன். வரமாட்டேன்கறார்" என்றவள், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

விஷயத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள், அவளது கணவரைப் பார்த்து லேசாகத் தமது புருவத்தை உயர்த்த அதன் அர்த்தம் புரிந்து அந்த இளைஞன் பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு, "அவ சொல்றதும் நியாயம்தான் பெரியவா. ஆனா, ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம்...பத்து நாளுக்கு குறையாம மத்தவாளோட சேர்ந்து வடதேச கோயில்களுக்கு யாத்திரை போயிட்டு வரணும்கறா!

எனக்கோ வைதீகம்தான் தொழில். அதை விட்டுவிட்டு, நான் எப்படி இவளோடு யாத்திரை போக முடியும்? நீங்களே சொல்லுங்கோ" என்று முடித்தார். சற்று நேரம் மெளனமாக இருந்த பெரியவா, பிறகு சிரித்துக்கொண்டே, "ஓஹோ! இந்த விஷயத்துலே சரியான மத்யஸ்தம் பண்ணி தீர்ப்பு சொல்லும்படி என்னிடம் கேட்கத்தான் வந்தீர்களாக்கும்?" என்று கூறிவிட்டு, தொடர்ந்தார்.

"நீங்க ரெண்டு பேரும் சொல்வதும் நியாயம்தான். இருவரும் சேர்ந்து போக முடியாத இந்த நிலைமையில் என்ன செய்வது?" சொன்ன மகான், கொஞ்சம் யோசித்தார். என்ன சொல்லப் போகிறாரோ என அங்கிருந்த அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து, ஆச்சார்யாள், பேச ஆரம்பித்தார்.

"அலமேலு! ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் தீர்த்த யாத்திரை போகணும் என்பதுல நீ தீவிரமா இருக்கே. அதுலேயும், கணவரும் கூட வந்தால்தான் புண்ணியம்னு தெரிஞ்சு அதுல பிடிவாதமாகவும் இருக்கே! ஆனால், அவரோ உன் கூட வர்றது ரொம்ப சிரமம், பார்க்கற தொழில் பாதிக்கப்படும், வருமானம் கிடைக்காதுன்னு சொல்றார்.

இதுக்கு தீர்வு சொல்றேன் கேளுங்கோ. நீ எப்ப தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினாலும், புறப்படுவதற்கு முன், ஆத்துக்காரரை கிழக்கே பார்த்து நிற்கச் சொல்லி நமஸ்காரம் செய்!" சொல்லிவிட்டு கணவர் பக்கம் திரும்பினார்.

"நீ என்ன பண்ணறே உன்னோட மேல் அங்கவஸ்திரத்தை (தோளில் போடும் துண்டு) எடுத்து அகத்துக்காரியின் கையிலே கொடுத்து, "இது நான் உன்னோடு தீர்த்த யாத்திரை வருவதற்கு சமமானது, நல்லபடியாகச் சென்றுவா!" என்று வாழ்த்தி அனுப்பு.

நீ அந்த அங்கவஸ்திரத்தை பத்திரமாக வைத்துக்கொள். எங்கெல்லாம் ஸ்நானம் செய்கிறாயோ, அப்போதெல்லாம் அதையும் கையில் வைத்துக் கொள். சுவாமியை தரிசனம் செய்யும்போது கையில் வைத்துக் கொள். இப்படிச் செய்யும்போது, தம்பதியராக யாத்திரை போன புண்ணியமும் கிடைக்கும்....ரெண்டு பேருக்கும் எந்த மன சிரமமும் இருக்காது. என்ன சந்தோஷம்தானே?" என்று கனிவுடன் கேட்டு பிரசாதம் அளித்தார்.

மகாபெரியாவாள் சொன்ன இந்தத் தீர்ப்பால், அந்த இளம் தம்பதிக்கும் பரம சந்தோஷம்! பெரியவாளை நமஸ்கரித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அங்கே இருந்த மற்றவர்களும் மகாபெரியவரின் தீர்ப்பின் மகத்துவம் உணர்ந்து மெய்சிலிர்த்தனர்.
மகாபெரியவா சரணம்! குருவே சரணம்!





No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...