இராமாயணம் மாதம் !
ராமர், பரதன், லட்சுமணன், சத்துருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களுக்கும் அமைக்கப்பட்ட தனித்தனிக் கோவில்களை ஒன்றாகச் சேர்த்து, நான்கு கோவில்கள் எனப் பொருள்படும் வகையில் மலையாள மொழியில் ‘நாலம்பலம்’ என்று சொல்கின்றனர்.
கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த நான்கு கோவில்களில், ராமர் கோவில் திருப்பிரையார் என்னுமிடத்திலும், பரதன் கோவில் இரிஞ்சாலக்குடா என்ற இடத்திலும், லட்சுமணன் ஆலயம் மூழிக்குளம் என்ற பகுதியிலும், சத்துருக்கனன் கோவில் பாயம்மல் என்னும் இடத்திலும் அமைந்திருக்கின்றன.
திருப்பிரையாரில் உள்ள ராமர் கோவிலில் தொடங்கி, பாயம்மலில் உள்ள சத்துருக்கனன் கோவில் வரை ஒரே நாளில் நிறைவடையும் வகையில் புனிதப் பயணமாகச் சென்று வழிபடுவதை மலையாளத்தில் ‘நாலம்பல யாத்திரை’ என்கின்றனர். இந்தப் புனிதப் பயணத்தை மலையாள நாட்காட்டியின்படி கர்க்கிடக மாதத்தில் (தமிழ் மாதம் ஆடி) மேற்கொண்டு ராம சகோதரர்களை வழிபடுவது மிகவும் சிறப்பானது என்கின்றனர்.
ராமர், லட்சுமணன், பரதன், சத்துருக்கனன் ஆகிய நால்வரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை ஆகிய நான்கு உயர் லட்சியங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றனர். ராமரை மற்ற மூவரும் பின்பற்றுவது போல், நாமும் வாழ்க்கையின் லட்சியங்களான மூன்றையும் பெறச் சத்தியத்தைப் பின்பற்ற வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் உயர்ந்து மேன்மை அடைய முடியும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
அதிகாலையில் நிர்மால்ய தரிசன வேளையில் திருப்பிரையாரில் இருக்கும் ராமரையும், உஷாக்கால பூஜை வேளையில் இரிஞ்சாலக் குடாவில் பரதனையும், உச்சிகால பூஜை வேளையில் மூழிக்குளத்திலிருக்கும் லட்சுமணரையும், சாயரட்சை பூஜை வேளையில் பாயம்மலில் இருக்கும் சத்துருக்கனனையும் கண்டு வழிபடுவதை மரபாகக் கொண்டுள்ளனர்.
இந்த மரபுப்படி வழிபடுபவர்களின் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்கிற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இது போல், சகோதரர்களுக்கிடையே பாசம் அதிகரிப்பதுடன், அறிமுகமில்லாதவர்கள் கூட உடன்பிறந்த சகோதரர் போல் இருந்து நம்முடைய வளத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உதவுவார்கள் என்ற நம்பிக்கையும் இங்கு வழிபடும் பக்தர்களிடம் காணப்படுகிறது.
அமைவிடம்
ராமர் கோவில் அமைந்திருக்கும் திருப்பிரையார் திருத்தலம், குருவாயூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்சாலக்குடா என்றப் பகுதி, திருச்சூரில் இருந்து 22 கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது. லட்சுமணன் கோவில் அமைந்திருக்கும் மூழிகுளம் என்ற தலம், திருச்சூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், சத்துருக்கனன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல் என்ற பகுதி இரிஞ்சாலக்குடாவில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக் கின்றன.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!
No comments:
Post a Comment