திருப்பெரும்புலியூர்

சோழநாடு :- காவிரி வடகரைத் தலங்கள் (மொத்தம் 63 தலங்கள் )


சிவஸ்தலம் பெயர்:-திருப்பெரும்புலியூர்

இறைவன் பெயர்:-வியாக்ரபுரீஸ்வரர்

இறைவி பெயர்:-சௌந்தர நாயகி

தல விருட்சம்:-சரக்கொன்றை

தீர்த்தம்:-காவிரித்தீர்த்தம்,கோவில் தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்:- சம்பந்தர் மண்ணுமோர் பாகம் உடையார்


எப்படிப் போவது:-

திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) சிவஸ்தலத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது


ஆலய முகவரி:-

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
பெரும்புலியூர்
தில்லைஸ்தானம் அஞ்சல்
வழி திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்
PIN – 613203.


திருவிழா:-

மகா சிவராத்திரி.


தல சிறப்பு:-

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 53 வது தேவாரத்தலம் ஆகும்.


பிரார்த்தனை:-

புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:-

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

பொது தகவல்:-

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகப் பழைமையானவை. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. வெளிப் பிராகார வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. அடுத்து உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.


அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்றநிலையில் அம்பாள் அருட்காட்சி தருகிறாள். நவக்கிரக சந்நிதியில் எல்லா உருவங்களும் நடுவிலுள்ள சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பம்சம். கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.


இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.


தலபெருமை:-

நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தினார்.

தல வரலாறு:-

பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 

1) திருப்பாதிரிப்புலியூர், 

2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),

 3) எருக்கத்தம்புலியூர், 

4) ஓமாம்புலியூர்.


புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...