மகாபாரதப்போர் முடிந்த பிறகு ஒருநாள் அர்ஜுனன் நதிக்கரையில் தனியாக உலாவிக் கொண்டிருந்தான். வில் தரிக்காமல் சாதாரண உடையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தான். அவன் மனத்தில் கர்வம் மிகுந்திருந்தது. தானே கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரே தோழன் என்றும், அவருக்கு அதிகபட்சம் நெருக்கமானவன் என்றும் அவன் பெருமிதம் கொண்டிருந்தான்.
எதிர் திசையிலிருந்து ஒரு அந்தணர் வந்து கொண்டு இருந்தார். மார்பில் துலங்கிய முப்புரி நூலுக்கு முரண்பாடாக அவரது இடுப்பில் தொங்கியது நீண்ட போர் வாள்! அர்ஜுனன் அவரை நிறுத்திக்கேட்டான். "தூய அந்தணரே! தங்களது தோற்றப்பொலிவு தேவ குருவே பூமிக்கு இறங்கி வந்துள்ளாரோ என்று பிரமிக்க வைக்கிறது. ஆனால், உங்கள் கையிலுள்ள வாள் குழப்பம் ஏற்படுத்துகிறது. சாத்வீகமான தாங்கள், ஏன் இந்த கொலை வாளினை வைத்துள்ளீர்கள்? யாரைக்கொல்ல இந்த ஏற்பாடு?"
அந்தணர் உறுமலுடன் பதிலளித்தார், "ஒருவரா, இருவரா? நான்கு பேரை தலையை சீவ வேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை." "தங்களின் கடுங்கோபத்திருக்கு ஆளாகியிருக்கும் அந்த துரதிருஷ்டசாலிகள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" அர்ஜுனன் பணிவுடன் வினவினான்.
அந்தணர் மறுக்கவில்லை. "அவர்கள் பெயரை சொல்ல எனக்கென்ன பயம்? முதல் ஆள் நாரதர் - இவர் இருபத்து நாலு மணிநேரமும் டொய்ங் ... டொய்ங்குனு தம்புராவை நீட்டி, பாட்டுப்பாடி, பகவானை ஓயவெடுக்கவோ, தூங்கவோ விடுவதில்லை அக்கிரமம்," என்று சீற்றத்துடன் கூறியவர், "அடுத்த ஆள் திரௌபதி" என்றார். அர்ஜுனன் தனக்கேற்ற சிலிர்ப்பை மறைத்துக்கொண்டான், அந்தணர் தொடர்ந்தார்.
"கிருஷ்ண பகவான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், சமய சந்தர்ப்பம் பார்க்காமல் இந்த திரௌபதி, "ஹரி என் மானத்தைக் காப்பாற்று" என்று கூப்பாடு போட்டாள். பகவான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளுக்கு புடவையை அனுப்பலானார். ஒன்றிரண்டல்ல, நூற்றுக்கணக்கில். அன்று பகவானை பட்டினி கிடக்க செய்த கொடுமைக்காரி அவள்.
"மூன்றாவது ஆள் ப்ரஹ்லாதன். ப்ரஹ்லாதனைக் கொள்ளும்படி இரணியன் கட்டளை இட்டிருந்தான். இவனைக் காப்பாற்ற பகவான் கொதிக்கும் எண்ணைக் கொப்பரையில் இறங்கி கையில் ஏந்திக்கொண்டார். அடுத்த முறை மதம் பிடித்த யானையின் காலில் பாய்ந்து இவன் மிதிபட்டு சாகாதபடி காப்பாற்றினார். கடைசியாக, உலகளாவிய பேருருவம் படைத்த பகவான் இந்த ப்ரஹ்லாதனுக்காக ஒரு தூணுக்குள் சுருங்கிக் கிடக்க வேண்டி இருந்தது. பகவானை இவன் எவ்வளவு பாடுபடுத்திவிட்டான்!"
அர்ஜுனன் பிரமித்துப்போனான். "பிராமண உத்தமரே! நீங்கள் சொல்வது நியாயமாகத்தான் தோன்றுகிறது. நீங்கள் புதிய கோணத்தில் பார்க்கிறீர்கள், மற்றவர்களும் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்கள். ஆனால் நீங்களோ பகவானிடம் பாசமுடன் இருக்கிறீர்கள். பாசமே பகவானையும், பக்தனையும் இடைவெளி இல்லாமல் இணைக்கிறது. சரி, மிஞ்சியுள்ள நான்காவது ஆள் யார்?
"அவனா?" உறுமினார் அந்தணர், "பாண்டு மகாராஜாவின் மகன்களில் அர்ஜுனன் என்று ஒருவன் இருக்கிறானே, அவனை தீர்த்துக்கட்ட வேண்டும். மற்ற மூவர் விஷயமும் சிரமம். நாரதரையும், பிரஹ்லாதனையும் நான் வைகுண்டம் போனால்தான் பார்க்க முடியும். பெண் என்பதால் திரௌபதியைக் கொள்வது பெரும் பாவம், ஆனால், அர்ஜுனன் பற்றி பிரச்சினை இல்லை. அவன் ஆண். இங்குதான் அஸ்தினாபுரத்தில் வசிக்கிறான். தற்சமயம் அவனை மட்டுமாவது கொல்ல வேண்டும்."
"அப்படியா? அர்ஜுனன் செய்த குற்றம் என்ன?"
"நாரதர், திரௌபதி, ப்ரஹ்லாதனைவிட இவன் மிகவும் மோசம். இவன் பகவானை தனது அடிமைபோல் நினைத்து தேர் பாகனாக்கினான். போர் நடந்த பதினெட்டு நாட்களும் காலை முதல் மாலை வரை தேரை அங்கும் இங்குமாக ஓட்டச்செய்து பகவானை அலைக்கழித்தான். ஆயுதங்களால் அவர் திருமேனி புண்படச்செய்தான்."
தன்னை பகவானுக்கு மிகவும் நெருக்கமாக கருதிக்கொண்டு, "டேய் கிருஷ்ணா!" என்றெல்லாம் மரியாதை இல்லாமல் அழைத்ததை அவனே பகவத் கீதையில் ஒப்புக்கொண்டுள்ளான். ஏன் பகவானை வாட்டி வதைத்து அவமதித்த அந்த அர்ஜுனன் மட்டும் ஆயுதம் இல்லாமல் என் கண்ணில் படட்டும், முடிந்தது அவன் கதை" என்று சொல்லியபடியே அந்தணர் விடுவிடுவென்று அவனைக் கடந்து சென்றுவிட்டார்.
அர்ஜுனன் கண்களில் நீர் ததும்பியது. அவன் அந்தணர் இருந்த இடத்து தூசியில் சிறிதெடுத்து தலையில் தூவிக்கொண்டான். அவனது வாய் முணுமுணுத்தது. "சடங்கு வழி பக்தியைவிட, பாச வழி பக்தியே பரமானந்தத்தில் எளிதில் சேர்க்கும். இவரே என்னை விட கிருஷ்ணனுக்கு மிகவும் நெருக்கமானவர்."
No comments:
Post a Comment