காமாந்தகன் ஒருவன், ஒரு பெண்ணை பலாத்காரமாக அபகரித்துக் கொண்டு போனான். பெண்மணி அலறினாள். அந்த நேரத்தில், உத்தமமான வீரர் ஒருவர் பறந்து வந்து, காமாந்தகனுடன் போராடி தன் உயிரை இழந்தார்.
யார் இவர்கள்? காமாந்தகன் - ராவணன். அவன் தூக்கிக்கொண்டு போன பெண் - சீதாதேவி. பறந்து வந்து தடுத்து போரிட்டுத் தன் உயிரைத்தியாகம் செய்த வீரர் - ஜடாயு. கருடனின் மூத்த சகோதரர் அருண பகவான். இவர் சூரியனின் தேரோட்டியாக இருப்பவர். அருண பகவானின் மனைவி ச்யேனி. இவர்களது மூத்த புதல்வர் சம்பாதி இளைய புதல்வர் தான் ஜடாயு. இந்த ஜடாயுவிற்கும், தசரதருக்கும் தான் நட்பு உண்டானது. சாதாரண நட்பு அல்ல பெரும் சகோதர பாசம். பெற்ற தந்தையான தசரருக்குக்கூட, ஸ்ரீராமர் கையால் பிரேத சம்ஸ்காரங்கள்(இறுதி சடங்கு) செய்யக்கூடிய பாக்கியம் இல்லை. அந்தப் பாக்கியம், ஜடாயுவிற்குத்தான் கிடைத்தது. ஏன்? எப்படி?
சகோதரர்களான சம்பாதியும் ஜடாயுவும் ஒருநாள், ‘‘உயரமாகப் பறப்பது யார்?’’ என்ற போட்டியில் பறக்கத் தொடங்கினார்கள். அண்ணனைவிட, தான் உயரத்தில் பறக்க வேண்டும் என்று ஜடாயு உயர உயரப் பறந்தது. ஒரு கட்டத்தில் சூரியனின் வெப்பக்கதிர்களின் தாக்கம் தாங்காமல், ஜடாயுவின் சிறகுகள் கருகத் தொடங்கின. தம்பியின் நிலை கண்டு சம்பாதி பதறினார் தம்பியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பிக்கு மேலாக தான் பறந்தார். சூரியக்கதிர்கள் அவரின் சிறகுகளை எரித்தன. சிறகுகளை இழந்த சம்பாதி, முனிவர் ஒருவரின் (நிசாகரர்) ஆசிரம வாசலில் விழுந்தார்.
சம்பாதியின் அச்செயலால், ஜடாயு உயிர் பிழைத்தார். உயிர்பிழைத்த ஜடாயு அன்னை வாலாம்பிகை உடனுறை பவரோக வைத்தியநாதரான சிவபெருமான், முருகப்பெருமான் ஆகியோர் எழுந்தருளியிருக்கும் வைத்தீசுவரன் கோவிலைக் கண்டார். அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும் அம்பாளையும் மும்முறை வலம் வந்து பூஜித்தார் ஜடாயு.
அண்டர் போற்றிடுநல் வயித்தியநாத அண்ணலை
அருச்சனை புரியுமண்டு காதலினால் தீர்த்த
நீராடிவந்து மூவலம்செய்து பணிந்தான்
(புள்ளிருக்கு வேளூர் தல புராணம்)
அதன்பின் ஜடாயு, தண்டகாரணியம் வந்தார். தண்டகாரணியத்தில் ஜடாயு இருந்த வேளையில், படைகள் சூழத்தசரதர் வேட்டைக்கு வந்தார். வெயில் கொளுத்தியன் காரணமாக ஏற்பட்ட தாகத்தால் சோர்ந்து போன படைகள் ஓய்வெடுக்கத் தொடங்கின. தாகத்தால் தவித்த தசரதர் ஒரு மரத்தின் பெருத்த அடிப்பாகத்தில் தலையை வைத்துப்படுத்தார் உறங்கினார். சற்று நேரத்தில், தூக்கக் கலக்கத்தில் தன் காலின் அருகில் இருந்த பாம்புப்புற்றை உதைத்தார் தசரதர் விளைவு? புற்றில் இருந்த பாம்பு, கோபம் கொண்டு புற்றில் இருந்து வெளி வந்தது. சற்று தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜடாயு, ‘விசுக்’கென்று எழுந்து பறந்து, தன் கூர்மையான அலகினால் பாம்பைக் கவ்வி, அதை இரு துண்டுகளாக ஆக்கி எறிந்தது.
அரவத்தினால் எழுந்த அரவம் கேட்டு எழுந்த அரசரிடம், ஜடாயு நடந்தவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னார். அது மட்டுமல்ல! தசரதரின் களைப்பை குறிப்பால் உணர்ந்து, கனிகளும் நீரும் தந்து, ‘‘மன்னா! உன் களைப்பு தீர இதை உண்டு விட்டு உன் நகருக்குச்செல்!’’ என்றார். எந்த விதமான பிரதிபலனும் எதிர்பாராமல் தன் உயிரைக் காத்த ஜடாயுவை,தன் மூத்த சகோதரராக - அண்ணனாகவே ஏற்றுக் கொண்டார் தசரதர். இதன் காரணமாகவே, தசரதரின் மகனான ராமருக்குப் பெரியப்பா ஜடாயு என விரிவாகவே கூறுவார் கம்பராமாயணத்தில் கரைகண்ட தமிழ் அறிஞரான பி.ஸ்ரீ.ஆச்சார்யா.
இனி, ஜடாயுவும், ராமரும் சந்தித்ததைப் பார்க்கலாம்! வனவாசத்தின் போது, அகத்திய ஆசிரமத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ராமர்,சீதை, லட்சுமணன் மூவரும் ஜடாயுவைப் பார்த்தார்கள். ஜடாயு. அவர்களிடம் ‘‘நீங்கள் யார்?’’ எனக் கேட்டார். ‘‘மன்னர் தசரதரின் மைந்தர்கள் நாங்கள்’’ எனப்பதில் வந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை ஜடாயுவிற்கு. ‘‘குழந்தைகளே! தசரதன் நலமா?’’ எனக்கேட்டார். ராமர், தசரதரின் முடிவைக்கூறினார். அதைக்கேட்டதும் ஜடாயு மூர்ச்சையாகி விழுந்தார். ராமரும் லட்சுமணரும் ஜடாயுவின் நிலைக்கண்டு, கண்ணீர் வடித்தார்கள். அவர்கள் வடித்த கண்ணீர் ஜடாயுவின் மீது விழ, ஜடாயு மூர்ச்சை தெளிந்தது.
மூர்ச்சை தெளிந்த ஜடாயு, தசரதரை எண்ணிப் புலம்பினார். ‘‘தசரதா! நீயில்லாத உலகில், சுமையாக இந்த உடம்பை வைத்துக்கொண்டு,நான் வாழ விரும்பவில்லை. நெருப்பில் விழுந்து இப்போதே இறந்து போவேன்’’ என்று பலவாறாகப் புலம்பினார். அதைக்கேட்ட ராமர் முதலான மூவரும் திடுக்கிட்டார்கள்.‘‘சத்தியத்தைக் கைவிட முடியாத தசரதர், பிள்ளைகளைக் கை விட்டார். அப்படிப்பட்ட அவரையும் தாயையும் அயோத்தி மக்களையும் கைவிட்டு வந்த எங்கள் துன்பமெல்லாம் உங்களைக் கண்டதும் நீங்கி விட்டது. இந்த நிலையில் நீங்களுமா எங்களைக் கைவிடப் போகிறீர்கள்?” என்று வருத்தத்தோடு கேட்டார்கள்.
ஜடாயு தன் நிலையை மாற்றிக்கொண்டார். ‘‘குழந்தைகளா! நான் உயிரோடு இருப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதால், நீங்கள் வனவாசம் முடிந்து அயோத்தியை அடையும்வரை, நான் உயிரோடு இருப்பேன்’’ என்றார். தனக்கு வந்த ராஜ்ஜியத்தைத் தம்பிக்காகத் தியாகம் செய்துவிட்டு வந்த ராமரைப் பற்றிய தகவல்களை எல்லாம் மனதாறப் பாராட்டி, அவர்கள் தங்குவதற்கான இடத்தைக் காண்பிப்பதற்காக ஆகாயத்தில் எழுந்து பறந்தார். தன் நிழலில் அவர்கள் நடந்து வரும்படியாகப் பறந்தார்.
பஞ்சவடியை அடைந்ததும், அங்கே அவர்களைத் தங்கும்படிச் சொல்லிவிட்டு, அரக்கர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் அந்த இடத்தில் சற்று தூரத்தில் இருந்த படியே, அவர்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார்.அந்தக் கால கட்டத்தில்தான், ராவணன் வந்து சீதாதேவியைக் கவர்ந்துகொண்டு போன நிகழ்ச்சி நடந்தது. சீதையின் அலறல் கேட்ட ஜடாயு, குரல் வந்த திசை நோக்கி பறந்தார். அலறுவது அயோத்தி மன்னரின் மருமகள் என்று தெரிந்து, அந்த எண்ணத்தில் போகவில்லை ஜடாயு யாராக இருந்தாலும் அந்த அபலையைக் காப்பாற்றுவது தன் கடமை என்ற நோக்கிலேயே போனார்.
அருகில் போனதும் தான் தெரிந்தது, அரக்கன் தூக்கிக்கொண்டு போனது சீதையை என்று. தன்னால் பாதுகாக்கப் படுபவளாயிற்றே! “ ஏய்! முட்டாளே! என்ன காரியம் செய்கிறாய்? நீ கெட்டுப்போவது மட்டுமல்லாமல், உன் உற்றம் - சுற்றம் என அனைவரையும் அழித்து விட்டாய்! இந்த உத்தமியை விட்டுவிடு! அழிந்து போகாதே! ‘‘இந்த சீதை உலகிற்கே தாயாக இருக்கக் கூடியவள். என்ன நினைத்து இவளைத்தூக்கிக் கொண்டு போகிறாய் ? இனிமேல் உன்னை யார் காப்பாற்றுவார்கள்?’’ என்று இடித்துக் கூறினார்.
‘ராவணன் சீதையை விடவில்லை மாறாகப் போரிடத் தொடங்கினான். அவனுக்கும் ஜடாயுவிற்கும் இடையே கடும்போர் விளைந்தது. ராவணனின் கிரீடங்கள், தோள் ஆபரணங்கள் என அனைத்தும் சிதறின. ஜடாயு, ராவணனின் தேரோட்டியை கொன்றார். ராவணன் கடுங்கோபம் கொண்டு, அரன் தந்த வாளான சந்திரகாசம் எனும் வாளால், ஜடாயுவின் சிறகுகளை வெட்டிக் கீழே தள்ளினான். ஜடாயு கீழே கிடக்க, சீதையுடன் ராவணன் சென்றான். சீதையைத்தேடிக் கொண்டு ராம - லட்சுமணர்கள் வந்தனர். வழியில் ராவணனால் சிறகுகள் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயுவைக் கண்ட ராமர், ஜடாயுவின் மீது விழுந்து மயக்கமடைந்தார்.
நெடுநேரம் மயக்க நிலையில் இருந்த ராமரை, அருவி நீர் கொண்டு வந்து மயக்கம் தெளிவித்தார் லட்சுமணன். மயக்கம் தெளிந்த ராமரோ, ஜடாயு இறந்து விட்டதாகவே நினைத்துப் புலம்பினார். ‘‘தசரதர்-ஜடாயு எனும் இரண்டு தந்தையருக்கும் யமனாகப் போய்விட்ட நான், இன்னும் உயிரோடு இருக்கிறேனே’’ என்று புலம்பத் தொடங்கிய ராமர், பலவாறாகப் புலம்ப, லட்சுமணரும் புலம்பினார். அந்த அழுகுரல்கள் கேட்டு,மெள்ளமெள்ளக் கண்களைத் திறந்தார் ஜடாயு. ராவணன் தலையிலிருந்த கிரீடங்களைத் தாக்கித் தள்ளிய மூக்கினால், ராம-லட்சுமணர்களை உச்சி முகர்ந்தார்.
‘‘வீரர்களே! இருவருமாக சீதையைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விட்டீர்களா?’’ என ஆரம்பித்த ஜடாயு, ராவணன் சீதையைக் கொண்டு போனதைச் சொல்லி முடித்தார்.கேட்டுக் கொண்டிருந்த ராமருக்குத் தர்ம ஆவேசம் வந்தது. ‘‘இப்போதே இந்த உலகை அழித்து விடுகின்றேன் பார்!’’என்று கொதித்தார். உயிர் பிரியும் அந்த வேளையிலும் ஜடாயு தன் நிலை இழக்காமல் பேசத்தொடங்கினார். ‘‘ராமா! என்ன பேசுகிறாய்? தசரதன் கைகேயி பேச்சைக் கேட்டுப் பழி ஏற்றான். நீ சீதையின் பேச்சைக் கேட்டுப் பழி ஏற்றாய். இது உம் பிழை என்பதைத் தவிர, உலகம் என்ன பிழை செய்தது?’’ என இடித்துக் கேட்கிறார்.
ஜடாயுவைத் தவிர, வேறு யாரும் இவ்வளவு உரிமையோடு முறையோடு ராமரை இடித்துப் பேசியதாகத் தெரியவில்லை. குற்றுயிரும் குலைந்துபோன உயிருமாக இருந்த நிலையிலும், இவ்வாறு பேசி ராமரை அமைதிப்படுத்திய ஜடாயு, நடந்த தகவல்களைச் சொன்னது. ஜடாயுவின் வார்த்தைகளைக்கேட்ட ராமருக்கு உள்ளம் உருகியது. ‘‘மனதை அலை பாய விடாதீர்கள்! முன்பு நீங்கள் வழிபாடு செய்த வைத்திய நாதப் பெருமான் எழுந்தருளியிருக்கும் (வைத்தீசுவரன் கோயில்) திருத்தலத்தில், உமக்கு ஈமக்கடன்களைச் செய்வேன்” என்றார்.
ராமரின் வார்த்தைகளைக் கேட்ட ஜடாயு, தரையில் கால்களைப் பரப்பியது. தலை தொங்கியது. ஆம்! ஜடாயு பூவுலக வாழ்வைத் துறந்தார். தங்களுக்காக உயிர்துறந்த ஜடாயுவிற்கு, தான் சொன்னபடியே வைத்தீசுவரன் கோயிலில், ஈமக்கடன்கள் அனைத்தையும் செய்து முடித்தார். பெற்ற தகப்பனாரான தசரதருக்குக்கூடக் கிடைக்காத பாக்கியம், ஜடாயுவிற்குக் கிடைத்தது. ஜடாயுவின் வாழ்வு, தியாக வாழ்வு.
No comments:
Post a Comment