பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார்.
சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார்.
‘சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார்.
அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார்.
பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா?’’ என்று கேட்டார்.
மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.
திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன்.
ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான்’’ என்று கோபித்துக்கொண்டார்.
கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது’’ என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.
இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன்.
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம்’’ என்று நிதானமாக கூறினார்.
வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.
அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை’’ என்றார்
.உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான்’ என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும்’’ என்று கூறினார்.
கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார்.
சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.
மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது.
சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.
மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை!’’ என்று கேட்டு நெகிழ்ந்தார்.
சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.
அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும்.
அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்’’ என்று ஆசியருளினார்.
தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.
.
பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது
No comments:
Post a Comment