Panchavan Madhavi | Pallipadai kovil | பஞ்சவன் மாதேவி | பள்ளிப்படை கோயில்

தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? பளிங்குக் கல்லில்தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா?

ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

"பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.

தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான்..

ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா? வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின் அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

தற்போது இந்த கோயிலை படத்தில் இருக்கும் இந்த பெரியவரும் அவரின் பேத்தியும் தான் பார்த்துக்கொள்கிறார்கள், இங்கு யாருமே வராததால் வெளியே இந்த கோயிலின் சிறப்பு குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. உலகில் பெரிய ஆட்கள் கூட யாரும் இதை சென்று பார்க்க வேண்டாம், உள்ளூரில் உள்ள நாமேனும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு அங்கு ஒரு விளக்கேற்றி வைத்து விட்டு வரலாமே!..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,