கஞ்சமலை ரகசியங்கள் | The Secrets of Kanjamalai

கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சித்தர்கள் வாழ்ந்த மலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை. கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலைத்தொடரை சார்ந்த ஒன்றாகும். சேலம் மாவடத்திலுள்ள சின்னசீரகபாடி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை அதிகம் சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.


இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது. இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும் இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மை யானவர்களான திருமூலர், காலங்கிநாதர், அகத்தியர், கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும்


மேலும் இது பல சிறப்புகளை யுடையதாகும் .
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர். எங்களுக்காக சீனாவிலிருந்து வந்து இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம்.


கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம். மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.


இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான். கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது.


அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங் கிரியையும், வடக்கே பெரும் பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்குமண்டலமாகும். சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.


பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்
சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்
முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்
மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.
(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்)


இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி பொன்னிநதி என்று அழைக்கின்றனர். அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கருஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர். அதியமான் அவ்வைக்குத்தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும்.


இந்த அதியமான் ஆண்ட தலைநகரம் தான் தகடூர் ( இன்றைய தருமபுரி .சேலத்தின் அருகில் உள்ள ஊர் ) . இன்றும் தருமபுரி சேலம் சாலையில் அதியமான் கோட்டை என்ற ஊர் அதே பேரிலேயே உள்ளது. அங்கே கோட்டையையும் இன்றும் காணலாம் .இங்கே அதியமான் மன்னன் வணங்கிய கால பைரவர் கோவில் இன்றும் கூட மிக பிரசித்திமாக உள்ளது.


அஷ்டமி தினத்தன்று கோவில் கூட்டம் அலைமோதும் . இது பெங்களூர் போகும் வழித்தடத்தில் உள்ளதால் கர்நாடகா மற்றும் பெங்களூரிலுருந்து ஏராளமான பேர் வருகின்றனர் . தேவே கவுடா அடிக்கடி இங்கு வருவது வழக்கம் . கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


சேலம் பகுதி மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் .. அதனால் இன்று சேலத்தில் பத்தடிக்கு ஒரு நகை கடையை காணலாம் . தங்க நகை கடைகள் சேலத்தில் அதிக அளவு பரவி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்


தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம். பலரும் கொல்லிமலை, கல்வராயன்மலை, பர்வதமலை, பொதிகைமலை, சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை.


காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர் கண்டது இந்தமலையில் தான் அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனி கொடுத்ததும் இங்கு தான், அது விளைந்த இடமும் இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்து பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போலாம் எனவும்அவரே குறிப்பிடுகிறார்.


சிவனும், பெருமாலும் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும். சுலுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது. சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.


கஞ்சமலைசித்தர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார். இவர் அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்கு பிரியமானவர்.


Kanjamalai - கஞ்சமலை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,