Horse Face Nandi | குதிரை முகத்தோடு நந்திதேவர்.

ராமபிரான், பரமேஸ்வரனை வழிபட்ட புண்ணிய தலம்; அகத்தியரின் சீடர் ரோமச முனிவருக்கு, சிவபெருமான் குருவாகக் காட்சி தந்ததிருத்தலம்; மிருகண்டுமுனிவரின் பாதம் பட்டதும், மார்க்கண்டேயரின் வம்சத்தினர் வழிபட்டதுமான பெருமைமிகு சிவத் தலம்; குதிரை முகத்துடன் நந்திதேவர் அருள்பாலிக்கும் திருத்தலம்!என்ன... 

இவ்வளவு சிறப்பு மிக்க இந்தத் தலம் எங்கிருக்கிறது?

நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலுக்குத்தான் மேலே சொன்ன பெருமைகள் அனைத்தும்!

பொதிகை மலையில், அகத்திய மாமுனிவர் தவம் செய்து வந்த காலம். அவரின் பிரதான சீடரான ரோமச முனிவர், தம் குருவின் ஆசியுடன்சிவ தரிசனம் பெற்று முக்தியடைய விரும்பினார். இதை அறிந்த அகத்தியர், தாமிரபரணி நதிக் கரையில் உள்ள ஒன்பது சிவாலயங்களை தரிசித்து வழிபடுமாறு தம் சீடரைப் பணித்தார்.

அத்துடன், அந்தத் தலங்களை ரோமசர் அடையாளம் காணும் விதம் தாமிரபரணியில் 9 மலர்களை மிதக்க விட்டார் அகத்தியர். அவை கரை ஒதுங்கிய இடங்களே நவகயிலாய திருத்தலங்கள் எனப்படுகின்றன. இதில் 5-வது தலம், முறப்பநாடு ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில்.

இங்கு தாமிரபரணி ஆறு, கங்கையைப் போன்று தெற்கு முகமாக (வடக்கில் இருந்து தெற்கு நோக்கி) பாய்வதால், இதை தட்சிண கங்கை என்கிறார்கள். இதில் நீராடி, குருவாகக் காட்சி அளிக்கும் ஸ்ரீகயிலாசநாதரை தரிசித்து வழிபட்டால்,கங்கையில் நீராடி, வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பர்.

சரி, இந்த ஊருக்கு முறப்பநாடு என்ற பெயர்வந்தது எப்படி? அசுரர்களின் தொல் லையைப் பொறுக்க முடியாத முனிவர்கள், இறைவனிடம் 'முறைப்பாடு’(முறையீடு) செய்த இடம் என்பதால், முறப்பநாடு எனும் பெயர் வந்ததாம்.

தாமிரபரணியின் மேற்குக் கரையில் அழகுற அமைந்துள்ளது திருக்கோயில். ஸ்வாமி ஸ்ரீகயிலாசநாதர் கிழக்கு நோக்கி காட்சிதர... தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள் ஸ்ரீசிவகாமி அம்பாள். ஸ்வாமி கருவறைக்கு எதிரே தாமிர தகடுகள் வேய்ந்த கொடி மரம். குதிரை முகத்துடன் நந்திதேவர்!சோழ மன்னன் ஒருவனுக்குக் குதிரை முகத்துடன் கூடிய பெண்குழந்தை பிறந்ததாம்.

மனம் வருந்திய மன்னன், தன் குழந்தைக்கு மனித முகம் வாய்க்க வேண்டி சிவபெருமானை தியானித்து தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய சிவனார், ''தாமிர பரணியின் மேற்குக் கரையில் உள்ளஆலயத்துக்கு வந்து வழிபடு. நினைத்தது நடக்கும்!’ என்று அருளி மறைந்தார்.

அதன்படி இங்கு வந்த சோழ மன்னன் தாமிரபரணியில் நீராடி,கயிலாசநாதரை வழிபட்டான். அப்போது குழந்தை யின் குதிரை முகத்தை நீக்கி மனித முகம் தந்து அருளினார்ஈசன்.

ஆனால், அந்தப் பெண் குழந்தையின் பூர்வ ஜன்ம பாவம் நந்திதேவரை தாக்க... அவரின் திருமுகம் குதிரை முகமாக மாறிப் போனது என்கிறது தல புராணம்.இங்கிருந்து பிராகார வலம் துவங்குகிறது.

ஸ்ரீராமன், இங்கு வந்து வழிபட்ட பிறகே, சீதாதேவியை ராவணன் சிறை வைத்திருந்த இடம் தெரிய வந்ததாம்! கோயிலுக்கு எதிரே, ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் தசாவதாரக் காட்சியை தரிசிக்கலாம்.

'குரு பார்க்க கோடி நன்மை’ என்பர். ஆகவே, சிவபெரு மானே குருவாக அருள்பாலிக் கும் இந்தத் தலம் வந்து அவரை வழிபடுவோம்; கல்வி- ஞானம் உட்பட கோடானுகோடி நன்மை அடைவோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,