63 சீடர்களுடன் ஒரு சித்தர் தலம்

63 சீடர்களுடன் ஒரே இடத்தில் 

ஐக்கியமான ஒரு சித்தர் தலம்


மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.



சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.



சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.


முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர். 

இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார். 

அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார்.

கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது. 

இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.

கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். 

அமைவிடம்:


நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.





No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...