Pancha Nathana Nataraja sthalam | கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா?

உங்களுக்கு கிட்னி பழுதா? சிறுநீரக கோளாறா? குணமடைய வேண்டி சென்று தரிசிக்க வேண்டிய கோயில்.

பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம் ஊட்டத்தூர்.

திருச்சி To பெரம்பலூர் சாலையில் பாடாலூர் என்ற ஊரிலிருந்து வலதுபுறமாக திரும்பி 6 கி.மீ சென்றால் ஊட்டத்தூர் கிராமத்தில் இருக்கும் பஞ்ச நதன நடராஜரை தரிசிக்கலாம். சிறுநீரக நோயை போக்கி கொள்ளலாம்.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநதன கல்லில், ஒரே கல்லால் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. இந்த வகை தெய்வ சிலை தற்போது வேறு எங்குமே கிடையாது

சிறுநீரக நோய்கள் தீர்க்கும் அரிய தலம் ...
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து வணங்கி மீண்டும் இந்திர பதவியை பெற்றார்.

பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் சந்நிதிக்கு முன் பிரம்ம தீர்த்தம் கிடையாது.

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்!
ஊட்டத்தூர், திருச்சி மாவட்டம்.

திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது

மூலவர் : சுத்தரெத்தினேஸ்வரர்
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி
நடை திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஸ்தல வரலாறு......
பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த பாடலூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் உள்ளது.

(இந்த எல்லையின் பெருமை தெரிந்தும், வணங்காமல் உதாசீனம் செய்து பாடாலூரை கடக்கமுயலும் வாகன ஓட்டிகளில் பலர் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். நெடுஞசாலை துறையினரால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞசாலையில் பாடலூருக்கு சில கிலோமீட்டர் முன்பே "விபத்துப்பகுதி; எச்சரிக்கையாக செல்லவும்" என்ற எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளது.)

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின் போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

மேற்கூரையில் நவக்கிரகங்கள்:
ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது.

இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.

அபூர்வ நடராஜர்......
இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.
அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:

ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நோய் தீர்க்கும் தீர்த்தம்:

உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

இதற்கு சான்றாக ராஜராஜ சோழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட, தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர்.

தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

சக்தி வாய்ந்த காலபைரவர்:
இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக கூறப்படுகிறது.

சந்தன காப்பு அலங்காரம்:
மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.
கோயில் சிலாச்சாரியாரின் அலைபேசி எண் : 9788062414




No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...