What is the benefit of doing tarpanam chiradham to our deceased parents and ancestors? | மறைந்த நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்?

மறைந்த நம் தாய் தந்தையர்க்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் சிராத்தம் - பண்ணுவதால் என்ன பயன்?


யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களைச் சேருமா?

ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார்.

குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும் என்று கேட்டார். அது போய்ச் சேர்ந்துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். கட்டுக் கடகடஎன்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய் சேரும். என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.

ஆனால் பணம் போய் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள்.

பித்ருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேச்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிராத்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.தந்தி மணியார்டர் அனுப்பியவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா?

மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,