அறிவோம் ஆயிரம் ஆன்மீகத் துளிகள்

1. கோவிலில் உட்காருவது ஏன்?

வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும். அப்போது, தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும். சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும்.
__________________________________________________________________________________

2. வெற்றி பயணத்திற்கு!
அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள்,
நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது. பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும்.
__________________________________________________________________________________

3. செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு?
1. புனித நதி நீராடுதல் - 3தலைமுறைக்கு
2. அன்னதானம், கோவிலில் தீபம், ஏழைப் பெண் திருமணம் - 5 த.மு
3. பித்ரு கைங்கர்ய உதவி - 6 த.மு
4. கோவில் திருப்பணி - 7 த.மு
5. அனாதை அந்திமக் கிரியை - 9 த.மு
6. பசு பராமரிப்பு - 14 த.மு
7. கயாவில் திதி - 21 தலை முறைக்கு
__________________________________________________________________________________

4. மகிழும் மகாலட்சுமி!

யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோவில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சன்னதியை சுற்றி வரச் செய்வர்.

இதற்கு 'கஜ பூஜை' என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என 'ஸ்ரீசூக்தம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின.
இவளை 'கஜ லட்சுமி' என்பர். 'கஜம்' என்றால் 'யானை'. கஜலட்சுமி சிற்பத்தை கோவில் கருவறை நுழைவு வாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.
________________________________________________________________________________

5. வரம் தரும் ''இலை''
பூஜையில் சுவாமிக்கு பிரசாதமாக தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவை படைப்பர். சிலர் சுத்தான்னம் (வெள்ளைச்சோறு) மட்டும் கூட வைப்பதுண்டு. பிரசாதம் வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்கவேண்டும். அது தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனதாக இருப்பது சிறப்பு. மண்சட்டி, தாமரை இலையிலும் பிரசாதம் படைக்கலாம். தாமரை இலையில் படைத்தால், மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து வரம் தருவார் என பரசுராம கல்ப சூத்திரத்தில் உள்ளது.
________________________________________________________________________________

6. பைரவா... பைரவா....

பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன்.

அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின் நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.

பைரவர் என்ற சொல்லுக்கு 'அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர்' என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்த அரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம்.

இவர் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை 'வைரவர்' என்று கிராமப்புறங்களில் சொல்வர்.

நவரத்தினங்களில் வைரத்தின் ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும்.
அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. இவரை ஞாயிறு அன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபடுவது சிறப்பு.
___________________________________________________________________________________

7. 'தல' கொடுத்த 'தல'

ரங்கநாதர் தவிர வேறெந்த பெருமாளையும் பாடாதவர் தொண்டரடிப் பொடியாழ்வார். தன் தந்தையின் அன்பு கிடைக்காததால் வருந்திய துருவன் என்ற சிறுவன், நாரதர் உதவியுடன் விஷ்ணு மந்திரம் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவன் வானுலகம் சென்ற போது, எமலோகத்தின் தலைவனான எமதர்மன், தன் தலையைப் படிக்கட்டாக்கி வைகுண்டம் செல்ல உதவினார். இதுபோல,

இந்த கலியுகத்தில் நாம் நிம்மதி பெறவும், வாழ்வுக்குப் பின் மோட்சம் செல்லவும் ரங்கநாதரின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,