திருமலை திருக்கோவிலில் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன

திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் உள்ள 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

ஏழுமலையானுக்கு நைவேத்தியம் படைக்க தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிரக குலசேகரப் படியைத் தாண்டாது.

வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும்.

ஏழுமலையானின் உடை 21 முழ நீளமும், 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடைகளில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். நீங்கள் இன்று பணம் செலுத்தினால் அந்த வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் 20,000 ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் ஏழுமலையானுக்கு சாத்தப்படும். நீங்கள் இன்று பணம் செலுத்தினால் அந்த வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஏழுமலையான் அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. ஒரு அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகுமாம்.

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன. திருப்பதியில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்குரிய வில்வ இலை அர்ச்சனை செய்ய உபயோகப்படுத்தப்படுகிறது.

சிவராத்திரி அன்று ‘க்ஷ பாலிகா’ என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது.

தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம். எந்த தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் கண்டிப்பாக ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி.

அதனால் தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். ஏழுமலையானை வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் வேங்கடமெனப்பெற்ற என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.

சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...