தேவ இரகசியம்

ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான்.

இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய் விட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான்.

நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன் அந்த குழந்தைக்கு வேறு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய் விட்டான்.

ஆனால், எமராஜாவோ, “இதோ பார். உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பதும் உனக்குத் தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் நீ பூமியில் போய் கிட” என்று கூறி அவனைத் தூக்கி பூமியில் போட்டு விட்டார்.

அவன் கன்னங்கரேலென்ற உருவில் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கிடக்க, அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன், “என்ன இது, இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே” என்று அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்குப் போர்த்தி “என்னுடன் வா” என அழைத்தான்.

எமதூதன் ஒரு வார்த்தை கூட பேசாமல் தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும், அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டார்கள். அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், “வா வா வந்து கொட்டிக்கோ” என்று சாப்பிடக் கூப்பிட, அவன் “விருந்தாளி வந்திருக்கிறானே” என்று சொல்ல, அவளோ தன் கணவனை திட்டினாள். “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” என்று மனதுக்குள் எண்ணிய எமதூதன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

ஒரு பத்து நிமிடம் கழித்து அவள் “சரி சரி வா” என எமதூதனை சாப்பிட வரச்சொல்லிக் கூப்பிடுவதைக் கண்டு அவன் லேசாக சிரித்ததும். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறியது.
தையற்காரன் அவனிடம், “எனக்கு காஜா போட, பட்டன் தைக்க உதவிக்கு ஆளில்லை . உனக்கு தங்க இடம் தந்து, சாப்பாடு போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்” என்று சொன்னான்.!! அதன்படியே எமதூதன் தையல் உதவியாளன் ஆகிவிட்டான்.

அப்படியே பத்து வருடங்கள் கடந்து போனது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்காரப் பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம், “இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது” என்று சொன்னாள். எமதூதன் அந்த குழந்தையையும், பணக்கார பெண்மணியையும் பார்த்து சிரித்ததும் அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறியது…
இன்னும் ஐந்து வருடம் கடந்து சென்றது.

ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வந்து “இதில் பத்து மீட்டர் துணி இருக்கிறது. 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தைத்து வை” என்று சொல்லி விட்டுப் போனான். அதற்குள் நம் எமதூதன் கை தேர்ந்த தையற்காரனாக மாறி விட்டான். ஆனால் அவன் பணக்காரன் ஆர்டர் கொடுத்து விட்டுப் போன கோட்டு சூட்டை தைக்காமல் இருந்தான். முதல் நாள் போய், இரண்டாவது நாளும் கடந்து போய் விட்டது.

தையற்காரன், “நாளைக்கு தருவதாக ஒப்புக் கொண்டிருந்தோமல்லவா? அந்த பணக்காரன் வந்து கேட்டால் அவனுக்கு நாம் என்ன சொல்வது?” என்று கேட்டதும், இவன் டர்ர்ரென்று அந்த பேண்ட் துணியைக் கிழித்து அதில் ஒரு தலையணை உறை, பெட்கவர் தைப்பதைக் கண்ட தையற்காரன் அவனிடம், “நீ என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் இங்கே வந்து நான் ஆர்டர் கொடுத்த கோட்டும் சூட்டும் எங்கே என்று கேட்டால் நான் என்ன பண்ணுவது?” என்றான்.

அப்போது கார் டிரைவர் பரபரப்புடன் ஓடி வந்து, “நீங்கள் சபாரி தைக்காதீர்கள். முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்” என்று சொன்னான்.

அதைக் கேட்டதும், இவன் முகத்தில் சிரிப்பு வர, அவன் முழுவதும் பொன்னிறமாக மாறி அவன் மெதுவாக உயர்ந்து மேலே போகத் தொடங்கினான்.

அந்தத் தையற்காரன், “அப்பா நீ யார்? உன் வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறை தான் சிரித்தாய். நீ ஒவ்வொரு முறை சிரித்த போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லி விட்டு, நீ போ” என்றான்.

அவன் “நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து போனால், அந்தக் குழந்தைக்கு யார் கதி என்று பரிதாப்பட்டு அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால், பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா” என்று எமதர்மன் என்னை இங்கே அனுப்பினார். அதனால் தான் பூமிக்கு வந்தேன். இப்போது தெரிந்து கொண்டு விட்டேன். நான் திரும்ப எனது பணிக்கு சேரப் போகிறேன்” என்றான்.

“நீ என்ன தெரிந்து கொண்டாய்? எனக்கும் சொல்லிவிட்டுப் போயேன்” என்று இவன் கேட்டான். முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது. பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வா என்று கூப்பிடும் போது அந்த முகத்தில் அன்னை மகாலட்சுமி தெரிந்தார். அப்போது, இந்த உலகத்தில் “ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும் ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள் தான் காரணம்” என்று தெரிந்து கொண்டேன். இது போய், அது வருவதற்கு பத்து நிமிடங்கள் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். இதுதான் தேவரகசியம் ஒன்று!

மனிதர்களிடமே பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.

“பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா? அதுதான் நான் இதன் அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை. நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு, இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்க வேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான். இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன். ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிற போது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது தேவ ரகசியம் புரிந்தது.

கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான். “மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு, நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே! எனக்குத் தெரியும் அவன் சாகப்போகிறான் என்று. அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை. அவன் இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்”.
இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு வருஷம் பட்டா போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!! நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை! அது தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும், மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் மூன்றாவது ரகசியம்!!

அதனால்தான் இந்த உலகத்தில் மனிதன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!! அதுபோலவே இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று இப்போதே வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!! அதனால்தான் உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிற போது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்!

சுருக்கமாக இந்த மூன்று ரகசியங்கள் இவை தான்..

*முதலாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.*

*இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார். மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும், அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

*மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம். இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அஞ்ஞானம்தான் உலகில் உள்ள துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.

இவைதான் அந்த மூன்று தேவரகசியங்கள். என்று சொல்லி விட்டு விடை பெற்றான் அந்த எமதூதன்.

எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!
உலக வாழ்வில் தான் தேவர்களுக்கும் தேவையான ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன என்பதை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...