Othimalai Murugan Thirukovil | ஐந்து முக முருகன் வீற்றிருக்கும் ஓதிமலை ஆண்டவர் கோவில்

ஐந்து முக முருகன் வீற்றிருக்கும் ஓதிமலை ஆண்டவர் கோவில்


ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும்.

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை. இங்கு பழைமையான முருகன் கோயில் உள்ளது. ஓதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து திருமுகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகப்பெருமானைத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு "ஆதிபிரம்ம சொரூபம்' எனப்படுகிறது.

இத்திருக்கோயிலை 1800 படிகளைக் கடந்த பின்னரே அடையமுடியும். இந்தப் படிகள் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளதால் மலை ஏறுவதற்குச் சற்றுச் சிரமமாகவே இருக்கிறது. வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.

இம்மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அங்கிருந்தே மேலே மலைக்குச் செல்லும் படிகள் ஆரம்பம் ஆகின்றன. புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை- மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறை ஊரில் இந்த மலை அமைந்துள்ளது. இது மிகவும் பழைமையான பாடல் பெற்ற முருகன் தலமாகும்.

சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம் ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இத்தலம் ஓதி மலை என்றும் சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்றும் திருநாமம் ஏற்பட்டது.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் ஓதிமலையில் முதலில் முருகப்பெருமானை தரிசித்தார். பின்புதான் முருகப்பெருமானின் பரிபூரண அனுக்கிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாகச் சொல்லப் படுகிறது. ஓதிமலையில் போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்துமுக முருகன் விக்கிரகம்பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் கூறப்படுகிறது.

போகர் தவம் செய்த பூதிக்காடு:
இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.

இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் "விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்
சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம்.

ஓதிமலை குறித்த புராணச் செய்தி
படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது.

முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.


ஓதி மலை அமைவிடம்

சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வரவேண்டும்.

புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி குறைவு..

1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..
2. கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .
3. மதுரையில் இருந்து மதுரை - பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..
ஒருமுறை சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண கடாட்சியமும் ,அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள் ..


முருகபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள்
1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் -- அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,
2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன் -- பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,
3. நான்கு முகம் எட்டு கரங்களுடன் திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்
4. மூன்று முகம் ஆறு கரங்களுடன் -- கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,
5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன் -- சென்னிமலையிலும்,
6. ஒரு முகம் தண்டாபுதபாணியாக -- பழனியிலும், மற்றும் அனேக
இடங்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.


1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்- திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. மூன்று முகத்திருக்கோலம் - மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

5.இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகலகிரக பீடைகளும் உடனே விலகும்.

6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம்

சிறப்பம்சம்:
ஐந்து முகமும், ஆயுதங்களும் கொண்ட முருகனை "கவுஞ்ச வேதமூர்த்தி' என்று அழைப்பர். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். ஓதிமலை அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் உள்ளார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதிகளுக்கு நடுவே முருகன் இருக்கும்படியாக, சோமாஸ்கந்த அமைப்பில் இக்கோயில் உள்ளது. இடும்பன், சப்தகன்னியர் சந்நிதிகளும் உள்ளன. பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் "இரும்பறை' எனப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு உள்ள கல்யாண சுப்பிரமணியரை வழிபடுகிறார்கள். ஓதிமரம் இத்தலத்தின் விருட்சம்.

பூ பிரார்த்தனை:
பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன், ஒரு வெள்ளைப் பூவையும், சிவப்பு பூவையும் தனித்தனி இலைகளில் வைத்துக் கட்டி முருகன் முன்னிலையில் வைக்கிறார்கள். அர்ச்சகர் அல்லது குழந்தைகள் மனதில் நினைத்த பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தால், அந்தச் செயலைத் தொடங்கலாம் என முடிவெடுக்கின்றனர். இந்த சடங்கிற்கு "வரம் கேட்டல்' என்று பெயர். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறவும், அறியாமல் செய்த தவறால் ஏற்பட்ட பாவம் நீங்கவும் சுவாமிக்கு பாலபிஷேகமும், சந்தனக்காப்பும் செய்கிறார்கள்.

திறக்கும் நாட்கள்:
திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, அமாவாசை நாட்களில் காலை 10- மாலை 6 .

ஓதி மலை அமைவிடம்
திருப்பூரில் இருந்து > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும்.

Othimalai Murugan Kovil

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,