துளசிதாசருக்கு உதவிய அனுமன்

ஒருமுறை துளசிதாசர் ஆஞ்நேயரிடம் உங்களுக்கு ராம் - லட்சுமணரின் அனுக்கிரகம் கிட்டியது போல் எனக்கும் அவர்களின் தரிசனம் கிட்ட வேண்டும். அதற்கு நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.


துளசிதாசரின் வேண்டுகோளை ஏற்ற அஞ்சனை மைந்தன் அவரிடம், இதுதான் சித்ர கூடம். இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து, ராமஜபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார். அதற்கு துளசிதாசர் நீங்களும் கூட இருக்க வேண்டும் என்றார்.


நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நானும் இருப்பேன் எனக்கு வேறு என்ன வேலை? என்று கூறி மறைந்து விட்டார் ஆஞ்சநேயர். துளசிதாசரும் ராம ஜபம் செய்ய ஆரம்பித்தார்.


மனதில் ராமர் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணனுடன் வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.


மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர். மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன. அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள். துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார்.


ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள் கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர். குதிரையில் வந்தவர்கள் தாசரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர். தாசர் தன் மனதில், ஆமாம், பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா?


தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் என் ராமர் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.


சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ராம லட்சுமணர்களைப் பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே.... என்றார் தாசர். என்ன இது, உமது பக்கமாகத் தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார் அனுமன்.


ஐய்! வந்தவர்கள் ராம லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று புலம்பினார் துளசிதாசர். அதற்கு அனுமன், ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா? என்று கேட்டார்.


உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தர்களை அலட்சியம் செய்து விட்டேன் வாயுகுமாரா. இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார்.


அதற்கு அனுமன், எல்லாம் சரி, நீர் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயணப் பாராயணம் செய்யும். ராமன் வருவாரா பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார், ராம நாம ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தைப் பாராயணம் செய்தார், இரண்டு நாட்கள் ஓடிவிட்டது.


அன்றைய தினம் தாசர், ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர்.


வந்தவர்களில் ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம் முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி, சுவாமி, கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் தாசர். சந்தனம் கேட்ட இளைஞர்கள், சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றனர்.


(வட இந்தியாவில் கங்கை முதலிய நதிக்கரைகளில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக்கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது).


அதற்கென்ன, இட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோடு சந்தனத்தைக் குழைக்கிறார். அந்த கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார. அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார்


அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்தவனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது.


சித்ர கூடகே காடபரே பகி
ஸந்தக கீ பீர
துளசிதாஸமே சந்தந கிஸே
திலக தேத ரகுபீர.


பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்). இதைக் கேட்ட துளசிதாசர் திடுக்கிட்டு சுய நினைவிற்கு வந்தார்.


சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்தக் கருப்பு இளைஞன். ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது? என்று கதறிக்கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர். மறுகணம் ராம, இலட்சுமணரைக் காணவில்லை. கடவுள் தன்னை முழுவதுமாகச் சரணடைந்த உண்மையான பக்தர்களுக்குக் கலியுகத்திலும் எந்த ரூபத்திலும் காட்சி தருவார்.


இது சத்தியம் என்பதை நிரூபிக்கிறது துளசிதாசரின் சரிதம்.


ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !!!



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...