இந்திரன் பழி தீர்த்த படலம் | Thiruvilaiyadal Puranam

இந்திரன் பழி தீர்த்த படலம் திருவிளையாடல் புராணம் நூலில் மதுரைக்காண்டத்தின் முதல் படலம் ஆகும்.


இறைவனான சிவபெருமான் இந்திரன் பெற்ற சாபத்தினை நீக்கியதும், இந்திரன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு இந்திர விமானம் அமைத்தது பற்றியும் இப்படலம் விளக்குகிறது.


கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்தும் பற்றியும், சொக்கநாதர் கோவிலின் சித்திரா பௌர்ணமி வழிபாட்டின் பலன்கள் பற்றியும் இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.


இனி இந்திரன் பழி (பாவம்) தீர்த்த படலம் பற்றிப் பார்ப்போம்.


இந்திரனின் அலட்சியம்.

முன்னொரு சமயம் இந்திரன் தேவலோகப் பெண்களின் நடனத்தில் மோகித்து தன்னுடைய கடமையை செய்யத் தவறி இருந்தான். அப்போது தேவேந்திரனைக் காண தேவகுருவான வியாழபகவான் இந்திரனின் இருப்பிடத்திற்கு வந்தார்.

நல்லறிவினைப் போதிக்கும் ஆசிரியரின் வரவைக் கூடக் கவனியாது ஆட்டம் பாட்டத்தில் அவன் நாட்டம் செலுத்தினான். இந்திரனின் அலட்சியத்தால் வெறுப்புற்ற வியாழபகவான் தேவலோகத்தை விட்டு வெளியேறினார்.

தேவகுருவின் வரவையும், இந்திரனின் அலட்சிய செயலால் அவர் தேவலோகத்தை விட்டு நீங்கியதையும் தேவர்கள் மூலம் இந்திரன் அறிந்தான். அவன் தன் செயலுக்கு மிக்க வருந்தி தேவர்களுடன் இணைந்து தேவகுருவைத் தேடினான். அவர்களால் தேவகுருவை காண இயவில்லை. தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பரிகாரம் தேடி அவன் தேவர்களோடு பிரம்மலோகத்திற்குச் சென்றான்.


நான்முகனின் வழிகாட்டுதல்.

நான்முகனின் இருப்பிடத்தை அடைந்த தேவேந்திரன் நடந்தவைகளை எல்லாம் எடுத்துக் உரைத்து தேவர்களுக்கு தற்போது நல்வழிகாட்ட குரு இல்லாததையும் எடுத்துக் கூறி வருந்தினான்.

அப்போது நான்முகன் “நீங்கள் வியாழ பகவானைக் கண்டுபிடிக்கும் வரையில் அறிவாலும், தொழிலாலும் சிறந்த ஒருவரை உங்களின் தற்காலிக குருவாக்கிக் கொள்ளுங்கள்” என்றார்.

“துவட்டா என்பவனின் மகனும், மூன்று தலைகளை உடையவனும் அசுர குலத்தில் உதித்தவனும் ஆகிய விச்சுவரூபன் என்பவனை உங்களின் தற்காலிக குருவாக்கிக் கொள்ளுங்கள்” என்றார்.

அசுரகுலத்தில் உதித்தவனை குருவாக்கிக் கொள்வதா என்று முதலில் யோசித்த தேவேந்திரன் இறுதியில் நான்முகனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டான்.


இந்திரனை பிரம்மகத்தி தோசம் பற்றி நீங்குதல்.

வியாழபகவானை அலட்சியப்படுத்தியதற்காக வருத்தம் கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய தேவேந்திரன் எண்ணினான். புதிய குருவான விச்சுவரூபனிடம் “தேவர்கள் நன்கு வாழ யாகம் செய்ய வேண்டும்.” என்று கூறினான்.

அதற்கு சம்மதித்த விச்சுவரூபனும் வாயினால் தேவர்களின் நலத்திற்காகவும், மனதினால் அசுரர்களின் நலனுக்காகவும் யாகத்தினை நடத்தினான்.

இதனை அறிந்த தேவேந்திரன் விச்சுவரூபனின் மூன்று தலைகளையும் கொய்தான். அவனின் மூன்று தலைகளும் காடை, ஊர்குருவி, கிச்சிலி பறவைகளாக மாறின.

ஆசிரியரைக் கொன்ற பாவத்தினால் இந்திரனை பிரம்மகத்தி தோசம் பிடித்தது.

இந்திரனின் பிரம்மகத்தி தோசத்தினை தேவர்கள் மரங்களிடத்தில் பிசினாகவும், மகளிரிடத்தில் பூப்பாகவும், நீரினிடத்தில் நுரையாகவும், மண்ணிடத்தில் உவராகவும் பிரித்து அளித்தனர். இதனால் இந்திரனைப் பற்றிய பிரம்மகத்தி தோசம் நீங்கப் பெற்று பொலிவுடன் விளங்கினான்.


விருத்தாசுரன் தோன்றல்.

தன் மகன் விச்சுவரூபனின் முடிவினை அறிந்த துவட்டா இந்திரனை அழிக்கும் பொருட்டு வேள்வி ஒன்றினைத் தொடங்கினான். அவ்வேள்வியிலிருந்து பயங்கரமான உருவத்துடன் அசுரன் ஒருவன் தோன்றினான். அவ்வசுரனுக்கு விருத்தாசுரன் எனப் பெயரிட்ட துவட்டா விருத்தாசுரனுக்கு இந்திரனை அழிக்க ஆணை இட்டான்.

தேவேந்திரனுக்கும் விருத்தாசுரனுக்கும் பயங்கரப் போர் ஏற்பட்டது. இறுதியில் தேவேந்திரன் விருத்தாசுரனின் மீது வச்சிரப்படையை ஏவினான்.

விருத்தாசுரன் வச்சிராயுத்தை வீழ்த்திவிட்டு தன்னிடம் இருந்த இரும்பு உலக்கையால் இந்திரனை அடித்து அவனை மூர்ச்சை அடையச் செய்தான்.

மூர்ச்சை தெளிந்த இந்திரன் இவ்வசுரனுடன் நேருக்கு நேர் போர் புரிய என்னிடம் வலிமை இல்லை எனக் கருதி மீண்டும் நான்முகனைச் சரணடைந்தான்.

இந்திரன் புதிய வலிமைமிக்க வச்சிராயுதத்தைப் பெறுதல்.

நான்முகனை சரணடைந்த இந்திரனிடம் “இப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க திருமால் ஒருவரே உனக்கு வழிகாட்டுவார். ஆகையால் அவரை சரணடைந்து விருத்தாசுரனை அழிக்க உபாயம் கேள்” என்று கூறினார்.

வைகுந்தம் அடைந்த இந்திராதி தேவர்கள் தங்கள் பிரச்சினையை வைகுந்தவாசனிடம் சொல்லி அதற்கு தீர்வினைத் தருமாறு வேண்டினர்.

அவர்களிடம் இரக்கம் கொண்ட திருமால் “ தேவர்களே பாற்கடலைக் கடைந்தபோது தங்களின் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்க ததீசி முனிவரிடம் தந்தீர்கள். அவரும் அவ்வாயுதங்களை திரவமாக்கி குடித்து முதுகுத்தண்டில் சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் சென்று அவரின் முதுகெலும்பைப் பெற்று புதிய வலிமைமிக்க வச்சிராயுத்தை உருவாக்கி அதனைக் கொண்டு அசுரனை வெல்லலாம்” என்று கூறினார்.
திருமாலின் கூற்றினை ஏற்றுக் கொண்ட தேவர்கள் ததீசி முனிவரை சந்தித்து நடவற்றை எல்லாம் கூறினர். கருணையுள்ளம் கொண்ட ததீசி முனிவரும் “இறைவனான சிவபிரானின் விருப்பப்படியே நான் என்னுடைய முதுகுகெலும்பினைத் தருகிறேன். தாங்கள் அதனைக் கொண்டு அசுரனை வெல்லுங்கள்.” என்றார்.பின் ததீசி முனிவரும் யோகத்தில் அமர்ந்து உடலை விட்டு நீங்கினார். பின் ததீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்ற இந்திரன் புதிய வலிமைமிக்க வச்சிராயுதத்தைத் தோன்றுவித்தான்.


பிரம்மகத்தி தோசம் மீண்டும் இந்திரனைப் பிடித்தல்.

புதிய வச்சிராயுதத்தைப் பெற்ற இந்திரன் மீண்டும் விருத்தாசுரனுடன் போரிட்டான். வலிமை பெற்று திரும்பி வந்த இந்திரனைக் கண்ட விருத்தாசுரன் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டான். அசுரனைக் காணாது திகைத்த இந்திரன் நான்முகனிடம் சென்று நடந்ததைக் கூறி அசுரனைக் கண்டறிய வழி கேட்டான். நான்முகனும் “அகத்தியரின் உதவியுடன் கடலினை வற்றச் செய்து அசுரனை அழித்திடலாம்” என்று வழி கூறினார்.இந்திரனும் அகத்தியரைச் சென்றடைந்து நடந்தவைகளைக் கூறி உதவிடமாறு கேட்டான். அகத்தியரும் கடலினை உளுந்தளவாக்கி குடித்து விட்டார்.
கடல்நீர் வற்றியதால் வெளியேறிய விருத்தாசுரனை இந்திரன் தன்னுடைய புதிய வச்சிரப்படையைக் கொண்டு அழித்தான். இதனால் இந்திரனை மீண்டும் பிரம்மகத்தி தோசம் மீண்டும் பிடித்துக் கொண்டது.பிரம்மகத்தியால் மனம் பேதலித்த இந்திரன் குளத்தில் மலர்ந்திருந்த தாமரைத் தண்டினுள் போய் ஒளிந்து கொண்டான்.


நகுடன் இந்திரப் பதவியை அடைதல்.

தேவேந்திரனை காணாது தேவர்கள் பூலோகத்தில் அசுவமேதயாகம் செய்து சிறப்புற்றிருந்த நகுடன் என்பவனை தேவேந்திரனாகத் தேர்வு செய்து இந்திரப்பதவியை அளித்தனர்.
இந்திரப்பதவி தந்த மமதையால் நகுடன் இந்திராணியான சசிதேவியை சொந்தமாக்க விரும்பினான்.


இந்திராணிக்கு ஏற்பட்ட துயரம்.

நகுடன் தனது விருப்பத்தை தேவர்களிடம் தெரிவித்து இந்திராணியை அழைத்து வரும்படி சொன்னான். இதனை அறிந்த இந்திராணி தங்களது குருவான வியாழபகவானை மனதில் நினைத்து தன்துயர் போக்கும்படி வேண்டினாள்.
வியாழபகவானும் “நகுடனை நேரடியாக வெல்ல முடியாது. அதனால் சப்த ரிசிகள் எழுவர் சுமந்து வரும் பல்லாக்கில் வந்தால் நகுடனை ஏற்றுகொள்வேன் என வேண்டுகோள் விடு” என்று கூறினார்.சசிதேவியும் வியாழபகவான் சொல்லியவாறே சொல்லி அனுப்பினாள். நகுடனும் இந்திராணியை அடையும் மோகத்தினால் சப்தரிஷிகள் பெருமை அறியாது அவர்கள் தன்னை சுமந்து செல்லப் பணித்தான்.
அவ்வாறு சப்தரிஷிகள் சுமந்து செல்லும்போது அவர்களை விரைந்து இந்திராணியிடம் அழைத்து செல்ல தகாத வார்த்தைகளால் நகுடன் ஆணையிட்டான்.நகுடனின் பேச்சால் கோபம் அடைந்த அகத்தியர் அவனை பாம்பாக மாறும்படி சாபமிட்டார். நச்சுப்பாம்பாக மாறிய நகுடன் அங்கிருந்த அனைவரையும் கடிக்க முற்பட்டான். அவர்கள் அனைவரும் அவனை அடித்து அழித்தனர். இவ்வாறு இந்திராணிக்கு ஏற்பட்ட துயரம் நீங்கியது.


இந்திரனின் சாபம் நீங்க வியாழபகவான் வழிகாட்டல்.

தேவேந்திரனை தங்களுக்கு மீட்டுத்தரும்படி வியாழபகவானிடம் இந்திராணியும், தேவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். வியாழபகவானும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு தாமரைத் தண்டினுள் ஒளிந்திருந்த தேவேந்திரனை அழைத்தார். குருவின் குரல்கேட்டு தேவேந்திரன் சித்தம் தெளிந்து தாமரைத் தண்டிலிருந்து வெளிப்பட்டான்.
ஆனாலும் அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி நீங்கவில்லை. வியாழபகவானும் பூலோகத்தில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் இந்திரனின் பிரம்மகத்தி நீங்கும் என்று வழிகூறினார்.


கடம்பவனத்தில் இறைவனைக் கண்டறிதல்.

வியாழபகவானுடன் பூலோகத்தை அடைந்த இந்திரன் ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபாடு நடத்தினான். அவ்வாறு சிவாலய தரிசனம் செய்யும்போது கடம்பவனத்தை கடக்க முற்பட்டான்.அப்போது அவனை பிடித்திருந்த பிரம்மகத்தி நீங்கி புதுப்பொலிவு பெற்றான்.
“கடம்பவனத்தில் இருக்கும் இறைவனின் கருணையால்தான் இந்திரனுக்கு பிரம்மகத்தி நீங்கி இருக்க வேண்டும். ஆதலால் இறைவனைக் கண்டறியுங்கள்” என்று வியாழ பகவான் இந்திரனிடம் கூறினார்.
இந்திரனும் படைவீரர்களும் இணைந்து தேடி இறுதியில் கடம்பவனத்தில் லிங்கத்திருமேனியையும், தீர்த்தத்தையும் கண்டறிந்தனர்.


சிவபெருமான் இந்திரனுக்கு அருளல்.

வியாழபவானின் அறிவுரையின்படி கடம்பவனத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை மலர்களால் வழிபட நினைத்து தீர்த்தத்தில் இறங்கினான்.
இறைவனின் திருவருளால் அத்தீர்த்தத்தில் பொற்றாமரைகள் மலர்ந்தன. இந்திரனும் அம்மலர்களைக் கொண்டு சிவபிரானை வழிபட்டான்.
பின்னர் அவ்விடத்தை சீராக்கி எட்டு யானைகள், 32 சிங்கங்கள், 64 சிவகணங்கள் கொண்ட அழகிய விமானத்தை அவ்விட இறைவனாருக்கு அமைத்தான்.இறைவனாரும் “தேவேந்திரனே உன்னுடைய பிரம்மகத்தி முற்றிலும் நீங்கிவிட்டது. நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.
“இறைவனே நான் என்றைக்கும் இங்கிருந்து தங்களை வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும்” என்றான்.ஆதற்கு இறைவனார் “ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் இங்க வந்து வழிபடு. அன்றைய தின இவ்வாலய வழிபாடு உனக்கு ஆண்டுமுழுவதும் வழிபட்ட பலனை உனக்கு நல்கும். இவ்வாலயத்தில் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற திருநாமங்கள் கொண்டு எம்மை வழிபடுவோர் உன்னைப்போலவே தங்களின் துன்பங்கள் நீங்கப் பெறுவர். நீ பல்லாண்டு இந்திரப்பதவியை வகித்து இறுதியில் எம்திருவடி சேர்” என்று அருளினார்.இன்றைக்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மூலவருக்கு இந்திரன் அமைத்த விமானம் இந்திர விமானம் என்றும், கடம்பவனத் தீர்த்தம் பொற்றாமரைக்குளம் என்றும், இறைவனார் சொக்கநாதர், சோமசுந்தரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


கதை சொல்லும் கருத்து.

1.சுக போகங்களில் மூழ்கி கடமையை மறந்தால் அதிகம் துன்பப்பட நேரிடும்.

2.எந்த சூழ் நிலையிலும் நம் வாழ்விற்கு வழிகாட்டிய‌ குருவை உதாசீனப் படுத்தக் கூடாது.

3.உயர்ந்த நிலை அடைந்தாலும் பெண்களை இழிவுபடுத்தினால் அழிவு உறுதி.

4.திக்கற்ற நிலையில் தெய்வமே துணையாகும்.

சிவாயநம
திருசிற்றம்பலம்.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...