16 முகங்களுடன் கூடிய சிவலிங்கம்

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம்!!!

16 முகங்களுடன் கூடிய சிவலிங்கம்!!!

சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர் பிரதிஷ்டை செய்த சோடச லிங்கம்!!

1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனத்தை ஒரு பிரதோஷ நாளில் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதி, மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார்.

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாகஅமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் எ‌ன்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் பீடமும் 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது தனிச் சிறப்பு. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒருபக்கமாகசாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது. ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).

இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம்== சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.

இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கிசற்றுதிரும்பியுள்ளது

ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.

கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி. சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.

இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி விழுப்புரம் மாவட்டம்.

No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...