தான்தோன்றி மலை - கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில்

கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வருகிறார் அருள்மிகு கல்யாண வெங்கடரமண பெருமாள். திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.


தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.


இக்கோயிலில் அதிசயிக்கும் வகையில் பெருமாள் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார். இங்கு தாயாருக்கு தனியாக சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம்.


புரட்டாசி பிரம்மோற்சவம் :

புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்த மறுநாள் இத்திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டு, புரட்டாசி மாத பிரம்மோற்சவ திருவிழா துவங்குகிறது. இத்திருவிழாவின் 7 - வது நாள் ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறும். திருவோண நட்சத்திரத்தன்று திருத்தேர் விழா கொண்டாடப்பட்டு, மறுநாள் அமராவதி நதிக்கரையில் ஸ்வாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விடையாற்றி உற்சவம் என்று சொல்லக்கூடிய பூ பல்லக்கு, முத்துப் பல்லக்கு போன்ற விஷேசமான வாகனங்களில் 10 நாட்கள் ஸ்வாமி வலம் வருவார். திருவிழாவின் இறுதி நாளன்று ஸ்வாமிக்கு பலவிதமான புஷ்பங்களைக் கொண்டு புஷ்ப யாக அர்ச்சனை செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெறும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர்.


கால் பாதம் அடித்தல்:
கை, கால் பிரச்னைகள் தீர வேண்டி இக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் தங்களின் பிரச்னை தீர்ந்தவுடன், ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு ஒரு கல்லில் தாங்கள் குணம் பெற்ற கை அல்லது காலை அக்கல்லின் மீது வைத்து கை, காலின் வடிவத்தைக் குறித்துக்கொண்டு அதன் மீது அடிப்பர். இந்த வழக்கம் நெடுங்காலமாக இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கு வந்து திருமண வரம் வேண்டியவர்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஸ்வாமிக்குத் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறுகிறது.


நடை திறக்கும் நேரம்:-
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கல்யாண வெங்கடரமண பெருமாளின் அருள் பெற்று பயனடைவோம்.




No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...