மனையடி சாத்திரமும் கிணறும்

மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர். சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி? அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி? அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சுவாரசியமான தகவல்கள்தானே!...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,