சித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை, தேனி மாவட்டம் .
>> சுருளிமலையானது மதுரையிலிருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது . பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" யின் தொடர்ச்சிதான் இந்த சுருளிமலை. இம்மலை கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்குகிறது.
>> இம்மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது. இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.
>> சுருளி அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் . இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
சுருளிமலை - தேவலோக கிரி :
>> சித்தர்களும், தவமுனிவர்களும், துர்வாச மகரிஷி- கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகளும் சதுரகிரி மலையில் இறைவனை நோக்கி தவம் புரிய - அத்தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த சித்தர்களுக்கும், ரிசிகளுக்கும் தேவ லோக வாழ்வைக் கொடுத்து தாமும் "மகா லிங்க" சொரூப மாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.
>> பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகும், தேவலோக கானல்களையும், வனப்பூஞ் சோலைகளும், சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும், அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும், போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.
>> அவ்வாறு கைலாயத்திற்கு செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் எதிர்ப்பட்டு ரிஷிகளை வணங்கி 'சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்' என்று கேட்க அதற்கு ரிஷிகள் " நாங்கள் சதுரகிரி மற்றும் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து இப்போது தான் இங்கு வருகின்றோம் " என்றனர்.
>> இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி, முனிவர், சித்தர்களைப் பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்து மலையில் தவம் புரிகிறார் . இவருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார். இவாறாக பல சித்தர்களும், தேவாதி தேவர்களும், ரிசி முனிவர்களும் தவம் செய்து சித்தியும்-முக்தியும் பெற்ற இடமே சுருளிமலையாகும் ..
சுருளிமலை- சுருளி வேலப்பர் திருக்கோவில் :
>> அருவிக் கரையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும், அங்கே குகையின் மீது அமைந்துள்ளது முருகபெருமானின் திருக்கோவில் . இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. எவ்வளவு நாட்களும் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும்.
>> மலையரசனான நம்பிராஜன் வள்ளியை வளர்த்து, முருகப் பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர், முருகனுக்கு தனக்கு சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தாராம்.இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
>> இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன. விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன. இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும் இந்த பாறைகள் மீது அமர்ந்து தவம் செய்ய, பாவங்கள் நீங்கி, முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை. இம்மலையில் இன்றும் அனேக சித்தர்கள் வாசம் செய்வதாக கூறுகின்றனர்.
“கைலாச நாதர் குகை”
>> “கைலாச நாதர் குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. நிமிர்ந்த நிலையில் உள்ளே செல்ல இயலாது . படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும். இமயகிரி சித்தர் தவம் செய்த போது இறைவன் சிவ பெருமான் குகையின் உள்ளே சென்று அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார். அதனால் தான் இது “கைலாச நாதர் குகை' என அழைக்க படுகிறது . இந்தியாவில் வேறு எந்த ஒரு மலைகளின் குகைகளில் இல்லாத சிறப்பு இந்த குகைக்கு மட்டுமே உண்டு. (“கைலாச நாதர் குகை” - இமயகிரி சித்தர் குகை இரண்டும் ஒன்றே )
>> இமயகிரி சித்தர் குகையானது மிகவும் சிறிய அளவில் உள்ளது . இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. அதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கிறது.. இந்த குகையின் உள்ளிருந்து திர்த்தம் வந்து கொண்டே இருக்கிறது. உள்ளே செல்ல பயமாய் இருந்தது. ஒரே இருட்டு... உள்ளே அமர்ந்து ஜபம் செய்ய அற்புதமான அனுபவங்களை பெற இயலும் . குகையின் உள்ளே எடுத்த புகைப்படத்தை பார்க்கவும் .(ஏழாவது புகைப்படம்)..
>> இமயகிரி சித்தர் குகைக்கு சற்று மேலே சென்றால் அற்புதமான சற்றே பெரிய குகை உள்ளது.. அதனுள்ளே லிங்க சொருபம் மனதை லகிக்க செய்கிறது. அங்கே அமர்ந்து தவம் செய்ய அருமையாய் இருந்தது.. அதன் நுழைவாயிலில் எட்டு லிங்கங்களுக்கு நடுவே ஹோம குண்டம் அமைக்க பட்டுருந்தது. சுருளிமலையில் சித்தர் நீலகண்ட ரிஷி போன்ற மகான்களும் தற்போது வாழ்ந்து இறை தொண்டாற்றி வருகிறார்கள்..
>> மலை அடிவாரத்தில் பூதநாராயண பெருமாள் அருள் புரிகிறார் .. ஆடி அமாவாசை, மற்றும் தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர். ஒருமுறை வந்து பாருங்கள் ..
>> சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
>> மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
சுருளிமலை அமைவிடம் :
>> தேனி மாவட்டம், தேனி வந்த பின்பு கம்பம் அல்லது உத்தமபாளையம் செல்லவேண்டும். இந்த இரண்டு ஊர்களில் இருந்தும் சுருளிதீர்த்தம் செல்லும் பஸ் மூலம் சுருளிப்பட்டி வந்து இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தால்தான் இந்த தலத்தை அடைய முடியும். நல்ல சுகமான தென்றலையும் மூலிகை மனத்தையும் அனுபவிக்கலாம். எல்லா காலத்திலும் சுருளி அருவியில் சுகமாய் நீராடலாம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
No comments:
Post a Comment