Navabrindavanam | நவபிருந்தாவனம் | Erode-TN and Anegundi-Karnataka

நவபிருந்தாவனம் எனும் தெய்வீக ஷேத்திரம், கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் துங்கபத்ரை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ளது.

1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் (1317-1324) .
நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் கொண்ட ஸ்ரீமத்வமத யதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார். ஒரு தடவை மத்வாச்சாரியார் காகதீய அரசவைக்கு வந்த போது மத்வர் இவரை வாதத்தில் வென்றார் அதன் பின் இவர் மத்வரின் சீடரானார். மத்வாச்சாரியாரின் பிரதான சீடர்கள் நால்வரில் இவர்முதல்வர்.

2. ஸ்ரீ ஜய தீர்த்தர் (1365 -1388) / ஸ்ரீ ரகுவர்யர் (1502 – 1537):
இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின் ( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா? அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. நாம் இரண்டு மகான்களையும் மனதில் தியானித்து இரட்டிப்பு நன்மை அடைவோமாக. இதில் ஸ்ரீ ஜய தீர்த்தர் மத்வாச்சாரியாரின் காலத்தில் கிரந்தங்களை சுமக்கும் எருதுவாக இருந்து அடுத்த பிறவியில் தோண்டு பந்த் என்னும் அரசகுமாரனாக பிறந்து அக்ஷோப்ய தீர்த்தரின் சீடராகி மத்வாச்சாரியாரின் ஸர்வ மூல கிரந்தங்களுக்கு உரையெழுதிய மகான் ஆவார்.

3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் (1392 – 1398)
மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட இவர் ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார், இவரது பாண்டியத்தையும் ஞானத்தையும் கண்டு ஸ்ரீ வித்யாதிராஜர் இவருக்கு ஸன்யாசமளித்து பீடாதிபதியாக்கினார்.

4. ஸ்ரீ வாகீச தீர்த்தர் (1398 – 1406) :
இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார்.

5. ஸ்ரீ வியாஸராஜர் (1447 – 1539) :
நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீ பிரகலாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் இவர். முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் உய்ய இராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார். ஸ்ரீ வியாஸராஜரின் காலம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பொற்காலமாகும். நரஸப்பன், வீர நரசிம்மன், கிருஷ்ண தேவராயர் மற்றும் அச்சுதராயர் என்னும் நான்கு அரசர்களுக்கு ராஜகுருவாக இருந்தவர் இவர். கிஷ்கிந்தை பகுதியான ஹம்பியில் சுக்ரீவரை முதன் முதலாக சந்தித்த துங்கபத்ரா நதியின் சக்ர தீர்த்தக் கரையில் ஸ்ரீ கோதண்டராமர் சீதாவுடனும், இளவல் இலக்குவனுடனும் அனுமன் இல்லாமல் சுக்ரீவனுடன் சேவை சாதிக்கும் திருக்கோவிலின் அருகில் யந்ரோத்ர ஹனுமனை நாம் எல்லோரும் உய்ய பிரதிஷ்டை செய்த மகான். அவர் பாரத தேசமெங்கும் மொத்தம் 731 ஹனுமனை பிரதிஷ்டை செய்தவர் ஆவார். ஒரு சமயம் கிருஷ்ணதேவராயர் ஆண்டு கொண்டிருந்த போது அரச பதவியில் இருப்பவர்களை தாக்கும் குஹ யோகம் நெருங்கியது. விஜயநகர சாம்ராஜ்யத்தை தனது அருளாசியின்படி ஆண்டுவரும் கிருஷ்ணதேவராயருக்கு குஹ யோகத்தினால் ஏதும் தீங்கு ஏற்படக்கூடாது என்று ஸ்ரீ வியாஸராஜர் ஒரு நாளில் சிம்மாசனம் ஏறி குஹ யோகமாக வந்த சர்ப்பத்தின் மீது தனது கஷாய வஸ்திரத்தை வீசி குஹ யோகத்திலிருந்து கிருஷ்ணதேவரையும் மாபெரும் இந்து சாம்ராஜ்ஜியத்தையும் காப்பாற்றிய மகான் ஆவார். மேலும் சீனப்ப நாயக் ஆக இருந்தவர் ஸ்ரீஹரி அருளினால் மனம் மாறி வந்த போது அவரை புரந்தரதாசராக்கி தாச கூட்த்தையும் வளர்த்தவர் இவர். இவரது பிருந்தாவனம் நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக அமைந்துள்ளது மேலும் இவரது பிருந்தாவனத்திற்கு முன்னர் அலங்கார தூண்கள் அமைந்துள்ளன. இவருக்கு காட்சி அளித்த வண்ணம் உள்ளார் ஸ்ரீ அவதாரத்ரய ஹனுமார்.

6. ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர் (1539 – 1564):
இவர் ஸ்ரீ வியாஸராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார். இன்றைக்கு ஸ்ரீ வியாஸராஜரைப் பற்றிய பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருப்பது இவர் எழுதிய ஸ்ரீவியாஸ விஜயம் என்னும் நூல்தான்.

7. ஸ்ரீ ராமதீர்த்தர் (1564 – 1584) :
இவர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் வியாஸராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார். ஸ்ரீ வியாஸராஜர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தீர்த்தர், ஸ்ரீ இராம தீர்த்தர் மூவரும் அடுத்தடுத்து பட்டத்திற்கு வந்து நவபிருந்தாவனத்தில் “ ஃ ” வடிவில் பிருந்தாவனஸ்தராகி இருப்பது வெகு சிறப்பு.

8. ஸ்ரீ ஸுதீந்த்ர தீர்த்தர் (1614 – 1623) :
காமதேனுவாய், கற்பக விருக்ஷமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீஸுதீந்த்ர தீர்த்தர். ஆம் இவர்தான் ஸ்ரீஇராகவேந்திர்ரருக்கு சன்யாசம் அளித்தவர். ஸ்ரீஇராகவேந்திரரின் அவதார ரகசியத்தை அறிந்து கனவில் ஸ்ரீஇராமபிரான் கட்டளையிட்டபடி வேங்கடநாதனாக இருந்த போது மறுத்தவரை விடாப்பிடியாக எடுத்துரைத்து தன் குருவின் அவாவை நிறைவேற்றியவர் இவர். இவரை வணங்க நமது தேவைகள் எல்லாம் இவர் அருளால் நிறைவேறும்.

9. ஸ்ரீ கோவிந்த ஓடயர் (1534)
இவர் ஸ்ரீவியாஸராஜரின் சமகாலத்தவர், அவருக்குமுன்பேஇங்குபிருந்தாவனஸ்தரானவர். ஆயினும் பட்டியலில் ஐந்தாவதாக வரவேண்டிய இவரை கடைசியில் கூறுவது இவர் பட்டத்திற்கு வராததால் இருக்கலாம். கிருஹஸ்தராகஇருந்துகுடும்பத்திற்குண்டான கடமைகளை செய்யாமல் சுற்றித் திரிந்தவரை பக்குவப்படுத்தி சன்யாசம் அளித்தவர்
ஸ்ரீவியாஸராஜர்.

இவ்வாறு சுமார் 300 ஆண்டுகள் இடைவெளியில் நவபிருந்தாவனம் உருவாகியது. இந்த நவ பிருந்தாவன நாயகர்களை நம்பிக்கையுடனும், நிஜ பக்தியுடனும் வழிபட அவர்களின் பரிபூரண அருள் நமக்கு கிட்டும். நாம் பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனால்தான் நமக்கு இந்த பாக்கியம் சித்திக்கும்.


ஈரோடு நவ பிருந்தாவனம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் வழியில் வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில் பல அற்புதங்கள் கொண்ட நவபிருந்தாவனம்அமைந்துள்ளது . கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது அல்லது 300வருடங்களுக்கு முற்பட்டது. பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற நவ நாயகர்கள் :

1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர் :
கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார் . பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேத தர்மம் , ஒழுக்கம் மற்றும் பக்தியை மக்களுக்கு போதித்தவர் .இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள் குறையில் மனமுருகி ஸ்ரீ ஆஞ்ச நேய விக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு . சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவ சமாதியாக நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனஸ்தராகிவிட்டார்..

2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர் :
இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார் . திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் . இவர் பிருந்தாவனத்திற்கு அருகில் இருந்த சுண்டைக்காய் உண்ட பலரும் சாகும் தருவாயில் பிழைத்துள்ளதாக வரலாறு . இவரை சுண்டைகாய் தீர்த்தர் என்றும் கூறுவர் . இவர் வைத்தியராக வாழ்ந்த மகான் . தனக்காக பிருந்தாவனம் நிர்மாணிக்க சிற்பிக்கு உத்திரவிட்டார் . அப்படி இம்மகானின் பிருந்தாவனம் தயார் செய்த போது பாம்பு தீண்டி சிற்பியின் மகன் இறந்து விட்டாதாக கேள்விப்பட்டு பதற மகான் சிற்பியை கூப்பிட்டு உன் மகன் சற்று நேரத்தில் உயிர்பெற்று வருவான் என கூறி கருட மந்திரத்தைதியானித்து காப்பாற்றினாராம் .
மந்திரப்பிரயோகம் .யந்திரப்பிரதிஷ்டை, தாந்திரிகம் ஆகிய கலைகளில் நிபுணராவார் . பல அற்புதங்கள் புரிந்து நவபிருந்தாவனத்தில் 2வதாக ஆஷாட சுத்தி ஆடி ஏகாதசியில் பிருந்தாவனஸ்தரானார் .

3. ஸ்ரீ நிதி தீர்த்தர் :
ஸ்ரீ பாதராஜ அஷ்டாகம் என்ற ஹ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய மகான்.
விஷ்ணுவிடம் அதீத பக்தி கொண்டவர்

4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் :
ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி
இறைவனே ஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர் , 14வது பீடாதிபதியானவர் வித்வான் , எழுத்தாளர் , இலக்கியவாதியாவார் ,மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்

5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்:
23வது மடாதிபதியாவார் . மத்வ சிந்தாந்தத்தின் உயர்ந்த கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளியமுறையில் அநேகர்க்கு கற்பித்த மகான் .தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ணபகவானை பூஜித்து வந்த திவ்ய புருஷர் .இவரின் முக்கிய உபதேசம் ஏகாதசி அன்னம் உண்பதை தவிர் , தினமும் மத்வாச்சாரியாரின் கிரந்தங்களை படித்து பகவானை பூஜிக்கவேண்டும் .கடன் வாங்கி எக்காரியமும் செய்யக்கூடாது. இவர் திருச்சனூரில் வேதவியாச பகவானை பிரதிஷ்டை செய்து பூஜித்தவர்

6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர் :
இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார் . மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை கைப்பட எழுதியவர் , விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது .
ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால் புலியை ஆசிர்வதித்தாக வரலாறு

7. ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்:
இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார் . துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே உண்மையானமுக்கிநிலைஎன்றுஉணர்ந்தவர் .இவர் ஸ்ரீ லட்சுபதி தீர்த்தர் காலத்தில் சேவை புரிந்தவராவார்

8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்:
ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37 வது வயதில் துறவறம் பூண்டு கி.பி 1806 முதல்1838 வரை ஓடப்பள்ளி ஸ்ரீ பாதராஜ மடத்தை நிர்வாகம் செய்தவராவார்

9.ஸ்ரீயசோநிதி தீர்த்தர்
கி.பி 1840ஆம் ஆண்டு தை மாதம் வளர்பிறை தசமியன்று தம் குரு ஸ்ரீ தபோநிதி தீர்த்த மகான் அருகில் பிருந்தாவனம் ஆனார்.

No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...