ஸ்ரீ வைஷ்ணவத் தூண்
வடகலை தென்கலைக்கு என்ன வித்யாசம் என்று நிறைய பேர் அறிவதில்லை. வித்யாசம் அவரவர் எண்ணத்தில் தான் என்கிறது வைஷ்ணவம்.
ஸ்ரீ ராமானுஜர் இரண்டு கலாசாலைகளை நிறுவினார். ஒன்று காஞ்சியில், மற்றொன்று ஸ்ரீ ரங்கத்தில். காஞ்சி ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே இருப்பதால் அதை வடகலாசாலை என்றும் ஸ்ரீரங்கக் கலாசாலை தென் கலாசாலை என்றும் அடையாளம் கொண்டது. கலாசாலை என்றால் அதில் கற்றுக்கொடுக்க, தகுந்த பேராசிரியர்கள் வேண்டுமே. ஸ்ரீ ராமானுஜர் தனது சிஷ்யர்களில் இரண்டுபேரை காஞ்சிக்கும் இரண்டுபேரை ஸ்ரீரங்கத்திற்கும் அனுப்பிவைத்தார். விசிஷ்டாத்வைதம் கற்றுத்தரப்பட்டது.
இப்போதெல்லாம் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ மாணவியருக்கு வெவ்வேறு சீருடை தருகிறார்களே அதுபோல் வட கலாசாலையைச் சேர்ந்தவர்களின் நாமம் பாதமின்றியும் தென் கலாசாலையோருக்கு நாமத்தில் மூக்கில் மேல் பகுதியில் ஒரு பாதமும் அடையாளமாகியது. கலாசாலை சுருங்கி காலப்போக்கில் வட கலை தென்கலை ஆகியது.
ஒரு மாணவன் B.A. படிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கல்லூரியில் ஒருமாதிரியும் மற்றொரு கல்லூரியில் வேறு மாதிரியும் அந்தப் படிப்பை கற்றுக்கொள்வது போல்.
அடிப்படையில் வித்யாசம் இரு கலைகளிலும் இல்லை.வித்தியாசங்களும் மறைந்துவருகின்றன. வடகலையில் சிறந்த ஆசார்யன் ஸ்ரீ வேதாந்த தேசிகரும் தென்கலையில் ஸ்ரீ ராமானுஜரும் மணவாள மாமுனியும்
போற்றப்படுபவர்கள். இதில் மணவாள மாமுனிகளைப் பற்றி சில தெரிந்த விவரங்களை மீண்டும் ஞாபகப் படுத்தும் வேலை தான் எனக்கு.
சிக்கில் கிடாரம் என்று ஒரு குக் கிராமம். ஆழ்வார் திருநகரி அருகே உள்ளது. இந்த ஊரில் பிள்ளை லோகாசார்யர் என்று சிறந்த ஒரு வைஷ்ணவ பக்தர். அவருக்கு இன்னொரு பெயர் கொல்லி காவலதாசர். அவரிடம் சிஷ்யனாக இருந்தவர் திகழக் கிடந்தான். என்ன அழகிய தமிழ்ப் பெயர் அப்போதெல்லாம் இருந்திருக்கிறது என்று அறியும்போது அவர்களது மொழிப்பற்றும் , ஞானமும் நம்மைத் திகைக்க வைக்கிறது. அப்போதெல்லாம் சிஷ்யன் என்பவன் இந்தகாலத்தில் நடப்பதுபோல் காலையில் ஆஜராகி மாலையில் வீடு திரும்புபவன் அல்ல. குருவின் வீட்டிலேயே அடிமையாக அவர் வீட்டிற்கு உழைத்து குரு, குருபத்னி ஆகியோரை திருப்திப் படுத்தி தான் கல்வி ஞானம் பெறவேண்டும். குரு எப்போது அழைத்து உபதேசிப்பார் போதிப்பார் என்பது தெரியாது.
மிகவும் பிடித்துப் போய் இந்த சிஷ்யன் அவருக்கு மருமகனாகவே ஆகிவிட்டான். திகழக்கிடந்தான் மனைவி கர்ப்பமானாள் . அவள் கர்ப்பமான நாள் முதலாக அவள் முகத்தில் ஒரு தனி தேஜஸ் உண்டாகி ஒளி வீசியது. ஊரார் இதைக் கவனித்து ''இவள் வயிற்றில் யாரோ ஒரு மகாத்மா தோன்றியிருக்கிறார். ஊர் உலகமெல்லாம் இனி நலம் பெறும். அவர் வரவால் லோகத்தில் அனைவரும் பாபங்களிலிருந்து விடுபடுவர். பிறப்பு இறப்பு இன்றி ஜன்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் பெறுவார்கள்'' என்று பேசிக்கொண்டார்கள்.
1370ம் வருஷம் ஐப்பசி மாதம் மூல நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் மகவை ஈன்றாள் அந்தப் பெண். திகழக் கிடந்தான் ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் கிடந்தான். ஆகாயத்தில் பெருமையோடு பறந்தான். குழந்தை வெண் தாமரை போல் ஜொலித்தது. நிறைய தலை முடி. கருநிற மேகம் ஒன்று கிரீடமாக அமைந்தாற் போல் இருந்தது. அகன்ற ஒளிவீசும் நயனங்கள்.
இது தெய்வீகக் குழந்தை என்பதில் யாதொரு சந்தேகமு மில்லை என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். பெற்றோர் அவர்கள் வழிபடும் தெய்வமான அழகிய மணவாளன் தான் இவன் என்று அந்தப் பெயரையே குழந்தைக்கு சூட்டினார்கள். நாளொரு சாஸ்திரமும் பொழுதொரு ஸ்தோத்ரமுமாக மணவாளன் வளர்க்கப்பட்டான். தக்க காலத்தில் வயதில் உபநயனம் நடந்தது. தந்தை திகழக் கிடந்தானே ஆச்சர்யனானார். வேதம் உபநிஷதம் எல்லாம் கற்றுத் தேர்ந்தான் மகன்.
ஆழ்வார்கள் வரலாறுகள் கிடைத்த பாமாலைகள் அனைத்துமே சிறுவனுக்கு அத்துபடியாயிற்று.
அடுத்ததாக அவனுக்கு திருமணம் முடிக்க தந்தை பெண் தேடலானார். மணமும் முடிந்தது. ஞானமும் பக்தியும் சேர்ந்து சத்வ குண சீலனாக திகழ்ந்தார் மணவாளன். உலக ஆசாபாசங்கள் அணுகவில்லை அவரை. தந்தை ஆசார்யனின் திருவடிகளையே பூஜித்தார். சரணாகதி அடைய அதுவே போதும் என்று மகிழ்ந்தார்.
அதிக காலம் அவரது தந்தை ஆசார்யன் பூமியில் இல்லை. திகழக் கிடந்தான் வைகுண்டம் ஏகினார். ஆச்சார்யனின் மறைவினால் கொழுகொம்பை இழந்த கொடியாக வாடினார் அழகிய மணவாளன்.
அக்காலத்தில் வாழ்ந்த ஒரு மகான், வித்வான் ஸ்ரீ சைலேசர். பாண்டிய மன்னனின் அரசவையில் ஒரு மந்திரியாக இருந்தவர். பணமும் பதவியும் புகழும் தந்த அந்த உத்தியோகத்தைக் காட்டிலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் இனித்தது ஸ்ரீ சைலேசருக்கு. எனவே உத்தியோகத்தை உதறித் தள்ளினார். முழுநேரமும் அவரை ஆட்கொண்டது ஆழ்வார்களின் அருளிச்செயல். ஆழ்வார்களின் பாசுரங்களைத் தேடி அலைந்தார். கிடைத்ததை பாதுகாத்தார். படித்து மகிழ்ந்தார்.
திருக்குருகூர் என்கிற க்ஷேத்ரத்தில் நம்மாழ்வாருக்கு ஒரு ஆலயம் நிர்மாணித்தது இந்த ஸ்ரீ சைலேசர் தான். நம்மாழ்வார் எம்மாழ்வார் என்று அவர் ஸ்மரணையாகவே தன்னை அர்ப்பணித்துகொண்ட ஸ்ரீ சைலேசர் அடைந்த பெருமை வாய்ந்த பட்டம் தான் '''திருவாய் மொழிப் பிள்ளை''.
இவரை விடுவாரா மணவாளன். ஓடினார் அவரைத் தேடி. குருவே சரணம் என்று அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவர் சிஷ்யரானார்.
குருவும், சிஷ்யனின் அருமையை அறிந்தவராயிற்றே. இவர் சாதாரணர் அல்ல. இவரால் வைஷ்ணவ சமுதாயம் ஒரு மாபெரும் பெருமையை அடையப்போகிறது என்று அவருள் தெய்வம் உணர்த்தியது. ஒவ்வொரு காரியமும் நிறைவேற அவ்வப்போது ஒரு மகான் தோன்றுவார். உலகம் அவரால் உய்யும் என்பது நாமறிந்தது தானே.
ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் உலகறிய வேண்டுமானால் அதற்கு ஒரு புண்ய புருஷன் தோன்றவேண்டுமானால் அது இந்த அழகியமணவாளன் தான் என்று குரு புரிந்துகொண்டார். புளகாங்கிதம் அடைந்தார். பெருமாளே என்று அடி நாபியிலிருந்து அவரது நன்றிக்குரல் எழும்பியது. இரு கரமும் கூப்பியவாறு சிரமேல் எழுந்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் சிலிர்த்தது.
ஒரு தாய்ப்பறவை எப்படி தன குஞ்சின் மேல் அக்கறை காட்டுமோ அதைப்போல குரு மணவாளனை அணுகி அவருக்கு போதித்தார். சிஷ்யன் ஆழ்வார்கள் பாசுரங்களைக் கற்றார். ஞானிகளின் வியாக்யானங்கள்
பாஷ்யங்களைக் கற்று தேனாக அனுபவித்தார்.
மற்ற சிஷ்யர்கள் தமது, குரு, மணவாளனிடம் மட்டும் பிரத்யேக சலுகை காட்டியதில் வழக்கம்போல அவரை விரோத பாவத்தோடு பார்த்தனர். மாறும் உலகம் என்றும் மாறுவதில்லை சில விஷயங்களில்.
''குருநாதா, ஆச்சார்ய சுவாமிகளே, ஏன் இந்த பாரபக்ஷம் எங்களிடம்?'' என்று கேட்டனர்.
''என் அருமை சிஷ்யர்களே, இந்த மணவாளன் வேறு யாருமில்லை, ஆதி சேஷனின் அவதாரம், போதுமா?'' என்றார் திருவாய் மொழிப் பிள்ளை. வாயடைத்தது அவர்களுக்கு.
'' இவன் ஆதிசேஷன். ஆயிரம் சிரங்கள் கொண்டவன், ஆயிரம் நாப்படைத்தவன். ஒரே நேரத்தில் ஆயிரம் கலைகளையும், ஞானத்தையும் க்ரஹிக்கும் சக்தி வாய்ந்தவன். எனவே இந்த அழகிய மணவாளனைப் பொன்னே போல் போற்றி அவனது திறனை, திறமையை வளர்த்து பயனடைய வேண்டியவர்கள் நாமும் நமக்குப் பின்னால் பல கோடி வைஷ்ணவர்களும். வேருக்கு நீரூற்றி விருக்ஷமாக்குவோம். பல பறவைகள், மாந்தர் பின்னர் கனிகள்,நிழல் எல்லாம் அநேகம் பெறுவர்'' என்றார் குரு.. அவரால் '' யதீந்திர பிரவண'' என்ற பட்டமும் பெறுகிறார்.
படிப்படியாக நாளுக்கு நாள் அழகிய மணவாளனின் பக்தி ஸ்ரீ ராமானுஜர் மேல் பல மடங்கு வளர்ந்து கொண்டே வந்தது.
அழகிய மணவாளரின் ''யதிராஜ விம்சதி'' என்கிற ஸம்ஸ்க்ரித நூல் விலை மதிப்பற்ற பொக்கிஷமாக தமிழக ஆழ்வார்களில் முதல் வடமொழி ஸ்தோத்ரமாக வெளிவந்தது. வைஷ்ணவ தத்வ ஸாராம்ஸத்தை வெளிக்கொணர்ந்தது.
மோக்ஷம் வேண்டினால் அதற்கு ஒரே வழி கெட்டியாக ஸ்ரீ ராமனுஜரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு சரணாகதி அடைவதே என்று முரசு கொட்டியது.
அழகிய மணவாளன் தனது ஆசார்யன் திருவாய் மொழிப்பிள்ளையிடம் கல்வி கற்று குருகுலவாசம் முடிந்து வணங்கி அவர் ஆசியுடன் சில சிஷ்யர்கள் தொடர ஸ்ரீ ரங்கம் பயணமானார். முக்ய சிஷ்யர் பொன்னடிக்கால் ஜீயர், மற்றொரு பெயர் ராமானுஜ ஜீயர். ஜீயர்கள் மடம் என்கிற வைஷ்ணவ சம்ப்ரதாயம் மணவாளன் மூலமே தொடர்ந்தது. வானமாமலையில் இன்றும் தொடர்கிறது.
ஸ்ரீ ரங்கத்தில் மணவாளன் ஆழ்வார்கள் பற்றியும் அவர்களது பொய்யாத இனிய தமிழ்ப் பாசுர பொன் மொழிகளையும் பரப்பினார்.
துக்கம் தரும் செய்தி வந்தது ஸ்ரீரங்கத்துக்கு. திரு வாய் மொழிப் பிள்ளை பரமபதம் அடைந்தார் என்று. ஆனால் அவர் பரம சந்தோஷத்துடன் தான் சென்றார். இனி வைணவ உலகத்துக்கு அதைத் தாங்கும் ஒரு நிலையான தூண் ஒன்று கிடைத்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுகள் இனி வைணவ சம்ப்ரதாயம் ஒரு கவலையும் படத் தேவையே இல்லை என்று அவருக்கு திருப்தி.
மணவாளன் திருக்குருகூர் சென்றார். ஆச்சர்யனுக்கு செலுத்தவேண்டிய அந்திம கிரியைகள், மரியாதைகள் செவ்வனே நடந்தன. திருக்குருகூர் வாசிகள் பாக்கியசாலிகள். மணவாளன் சில காலம் தங்கி அவர்களுக்கு திருவாய் மொழி உபதேசம் வியாக்யானங்கள் அவர் வாய் மூலம் ஆறாகப் பெருக அவர்கள் மகிழ்ந்தனர்.
ஸ்ரீரங்கம் பிறகு திரும்பியவர் ஓலைச்சுவடிகள் தேடி கண்டுபிடித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்பினார்.
''எங்கே என்னை மறந்துவிட்டாய், இங்கே வா'' என்று திருவேங்கடவன் மணவாளனை அழைத்ததும் அங்கே சில காலம் தங்கினார்.
திருப்பதியில் அடிவாரத்தில் தனது சிஷ்யர் வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் சுவாமிகளோடு தங்கி கோவிந்தராஜனை வழிபட்டார்.
அன்றிரவு திருமலை ஜீயர் ஒரு அதிசய கனவு கண்டார். ''பள பளக்கும் பொன்னிற மேனி கொண்ட ஒரு ஆசார்யன் சாய்ந்துகொண்டிருக்க அவர் கீழே ஒரு திரிதண்டி சுவாமிகள் தோன்ற'' என்ன ஆச்சர்யம் யார் இவர்கள்'' என்று விசாரிக்க செய்தி கிடைத்தது.
திருமலையில் ஜீயரிடம் அவரது சில சிஷ்யர்கள் ''ஸ்வாமின், திருப்பதியில் கீழே ஒரு ஆசார்யசுவாமி, அவரோடு அவர் சிஷ்ய சுவாமி ஆகிய இருவர் வந்துள்ளார்கள். கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தில் வழிபட்டதைக் கண்டோம். அவர்களைப் பார்த்தாலே பயமும் பக்தியும் எங்களை அறியாமல் தோன்றியது சுவாமி '' என்றனர்.
திருமலையிலிருந்து ஜீயர் தனது சிஷ்யர்கள் புடை சூழ கீழே இறங்கிவந்தார். அழகிய மணவாளனை கோவில் மரியாதைகளோடு வரவேற்றார்.
திருமலையிலிருந்து மணவாளன் காஞ்சி சென்றார். என்ன ஆச்சர்யம். அங்கே கனவில் ஸ்ரீ ராமானுஜர் காட்சியளித்தார்.
''மணவாளா, நீ செய்யவேண்டியது ஒன்று உண்டு. உடனே ஸ்ரீ பாஷ்யத்தை கவனமாகப் படி. தெரிந்துகொள். அதை உனக்கு தக்கவாறு கற்பிக்கக் கூடியவர் கிடாம்பி நாயனார் என்பவரே. அவரைத்தேடிச் செல்'' என்ற உத்தரவு ஸ்ரீ ராமானுஜரிடமிருந்து வந்தது.
கிடாம்பி நாயனாரை அடைந்தார் மணவாளன். தெண்டனிட்டு அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். குரு அவரை ஒரு ''வித்வத் சதஸில்'' கலந்துகொள்ளச் செய்தார்.
வித்வத் சதஸ் என்பது பல அறிஞர்கள் வந்து தங்களது கல்வி கேள்வி ஞானத்தை வெளிப்படுத்தி தர்க்கம், கலந்துரையாடல் போன்றவை நடத்துவது. சிறந்த வித்வான்கள், பண்டிதர்கள், வேத வித்தகர்கள் வந்து பங்குகொண்டு கருத்துகள், வியாக்யானங்கள் அங்கே பரிமாறப்படும். கேள்விகளுக்கு விடை சொல்வார்கள். பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே சிறப்படைவார்கள்.
அழகிய மணவாளனின் பேச்சு, அவர் உரைத்த கருத்துகள், வினாக்களை தொடுத்தவர்களுக்கு அவரது அருமையான விளக்கங்கள், விடைகள், அனைவராலும் புகழப்பட்டது. கிடாம்பி நாயனாருக்கு தெரிந்துவிட்டது மணவாளன் சாமானியர் அல்லர் என்று.
தனியே மணவாளனைக் கண்டு சந்தித்தார் கிடாம்பி.
''சுவாமி தாங்கள் யார். உங்கள் உண்மை ஸ்வரூபம் எனக்கு காட்டி அருளவேண்டும்'' என்று வேண்டினார்.
''அதற்கென்ன அப்படியே என்று மணவாளர் சிரித்துக்கொண்டே சொல்ல கிடாம்பி நாயனார் முன் கண நேரத்தில் ஆயிரம் படங்கள் கொண்ட ஆதிசேஷன் குடையாக நிற்க சங்கு சக்ரங்களோடு ஸ்ரீமன் நாராயணனே காட்சி தந்தார்.
ஸ்ரீ வைஷ்ணவ சரித்திரத்தில் ஸ்ரீ கிடாம்பி நாயனார் ஒருவரே இப்படி அழகிய மணவாளனின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டவர். வேறெவரும் இல்லை என்பது ஆச்சரியம்.
காஞ்சியில் தங்கிய காலத்தில் மணவாளன் அநேக கைங்கர்யங்களை புரிந்தார். ஒரு காலத்தில் இனி இந்த வாழ்வில் நான் பரமனின் சேவையில் இடைவிடாது, இடரேது மின்றி உழைக்க சன்யாச மார்க்கம் ஒன்றே சிறந்தது என முடிவெடுத்தார்.
சடகோப யதி என்ற ஞானி ஒருவர் காஞ்சியில் இருந்த காலம் அது. அவரைச் சரண் அடைந்து அழகிய மணவாளன் துறவு பூண்டார். அவரால் தீக்ஷை பெற்ற அன்றுமுதல் அழகிய மணவாளன் ''மணவாள மாமுனிகள்'' ஆனார். ''பெரிய ஜீயர்''. இந்த மணவாள மாமுனிகள் என்ற பெயர் உலகுள்ளவரை தமிழுள்ளவரை, கடைசிப் பாசுரம் எதிரொலிக்கும் வரை சூரிய சந்திரர்கள் உள்ளவரை நிலைக்குமே.
பெரிய ஜீயர் ஸ்ரீரங்கம் திரும்பினார். பல்லவராயன் மடத்தில் தங்கினார். திருமலை ஆழ்வார் மண்டபம் அவரால் உருவானது. அந்த மண்டபத்தில் குடியேறினார். தினமும் அவரது தேனமுதக் குரலில் ஸ்ரீ பாஷ்யம் உபன்யாசம் அங்கே நடைபெற்றது. கேட்டவரெல்லாம் பாக்யசாலிகள்.
பசி எடுத்துவிட்டது அவருக்கு. நம்மாழ்வாரைக் காணவேண்டும் என்ற பக்திப் பசி, பாசுரப் பசி. திருக்குருகூர் சென்றார். ஆழ்வாரைக் கண்குளிர தரிசனம் செய்தார். பெரியஜீயர் என்கிற பேர் எட்டு திக்கும் பெருமையோடு சென்று சேர்ந்தது. அவர் பெருமையில் மனம் புழுங்கி சில அற்ப ஜீவிகள் பொறாமைப் படத்தானே செய்யும்.அவரைக் கொல்ல திட்டம் தயாரானது.
நிசப்தமான ஒரு நள்ளிரவில் ஊரே அடங்கிய அமைதியான நேரத்தில் மணவாள மாமுனிகள் தங்கியிருந்த ஆஸ்ரம குடிசை தீப்பற்றி எரிந்தது. விஷயம் பரவியது. தூக்கத்தை விட்டு ஊரே திரண்டது. எல்லோரும் காண ஒரு கரு நாகம் பற்றியெரியும் குடிலிலிருந்து வெளியேறியது. ஒரு கண நேரத்தில் அந்த பெரிய கருநாகம் பெரிய ஜீயராக தோன்றி மறைந்தது.
தீய எண்ணம் கொண்ட தீங்கிழைத்தோர் வெட்கித்தலை குனிந்தனர். பெரிய ஜீயர் மகத்வம் புரிந்தது. திருக்குருகூர் மக்கள் சிரமேற் கரம் குவித்தனர். ''பெரிய ஜீய சுவாமிகளே'' என்று பிரார்த்தித்தனர்.
அந்த ஊர் ராஜாவின் உதவியுடன் திருக்குருகூர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. பெரிய ஜீயர் ஸ்ரீரங்கம் திரும்பினார்.
அங்கு தான் எறும்பி என்கிற ஊரில் வாழ்ந்த அப்பா என்கிற வைஷ்ணவர் அவர் சிஷ்யரானார்.
காஞ்சியில் ஒரு மஹான். அவரை எல்லோரும் அன்பாக அண்ணா என்றழைத்தார்கள். சிறந்த வைஷ்ணவ ஞானி. அவருடன் தர்க்கம் செய்வது எளிதல்ல. எந்த கருத்தையும் ஆழ்ந்து சிந்தித்து தக்க விடை கூறி எதிரிகளின் வாதத்தைப் பொடி செய்பவர் என்பதால் அவருடன் வாதம் செய்பவர்கள் அவரை பெருமையுடன் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்று அழைத்தனர். அவர் திருமலையில் தங்கி வெங்கடேச பெருமாளுக்கு திவ்ய கைங்கர்யம் செய்து வந்தார். ஒருநாள் அவரிடம் ஸ்ரீரங்கத்திலிருந்து வந்த ஒருவர் பெரிய ஜீயர் பற்றி சொல்ல அந்த கவனத்தில் பிரதிவாதி பயங்கரம், பெருமாளுக்கு தீர்த்தம் தக்க நேரத்தில் சாதிக்கவில்லை. மேலும் தீர்த்தத்தில் வாசனை திரவியமும் கலக்கவில்லை. இதால் அவர் குன்றிப்போய் மிக்க விசனம் உண்டாயிற்று.
''பெருமாள் கைங்கர்யத்தில் தவறு செய்துவிட்டேனே'' என்று கலங்கினார் பிரதிவாதி பயங்கரம். என்ன ஆச்சர்யம்? வாசனை திரவியங்கள் கலக்காமலேயே புனித தீர்த்தம் கம கமவென்று மணத்தது. அசரீறி அவர் காதில் ஒலித்தது. ''உன் தீர்த்தத்தை நான் ஏற்றுக்கொண்டேன்'' .
அந்த க்ஷணமே பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ ரங்கம் அடைந்து பெரிய ஜீயரை வணங்கி ஏற்றுக்கொண்டு அவர் சிஷ்யரானார்.
பெரிய ஜீயர் விட்டுச் சென்ற செல்வங்கள் நமக்கு என்ன தெரியுமா?
தேவராஜ மங்களம்.
ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச ஸ்துதி
யதிராஜ விம்சதி
உபதேச ரத்னமாலை
திருவாய் மொழி நூற்றந்தாதி.
ஆரத்தி பிரபந்தம்
திரு ஆராதனம் க்ரமம்
வயதேற ஏற உடல் குன்றியது பெரிய ஜீயருக்கு. உள்ளம் உற்சாகத்தோடு தான் இருந்தது.
திமு திமுவென்று கூட்டம் எப்போதும் பெரிய ஜீயர் செல்லும் இடமெல்லாம் சேரும். ஒருநாள் மண்டபத்தில் வழக்கம்போல் பெரிய ஜீயர் ரங்கநாதன், ரங்கநாயகி முன்பு அமர்ந்து பிரவசனம் செய்துகொண்டிருக்கும்போது, சம்பாவனை செய்கின்ற நேரம் வந்தது. அப்போது ஒரு ஐந்து வயது குழந்தை கோஷ்டியிலிருந்து ஓடி வந்தது.
எல்லோரும் அதிசயிக்க ''நான் ரங்கநாதன் வந்திருக்கேன் என்று சொல்லி கணீரென்ற குரலில்
''ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யாஜ மாத்ரம் முனிம்''
''திருவாய் மொழிப்பிள்ளையான ஸ்ரீ சைலேசரின் பெட்டகமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு என்னுடைய
நமஸ்காரங்கள். அவர் தான் ஞானம், பக்தி மற்ற சிறந்த குணங்களின் சாகரம், இருப்பிடம், எப்போதும் ராமனுஜரின் த்யானத்தில் தன்னை இழந்தவரல்லவா?''.
இந்த ஸ்லோகம் சொல்லிய குழந்தை எங்கே ? திடீரென்று தோன்றிய குழந்தை மாயமாய் மறைந்தது.
அங்கிருந்த அனைவருக்கும் புரிந்துவிட்டது. வந்தது ரங்கநாதனே என்று. அன்றுமுதல் அந்த ஸ்லோகம் ஆச்சர்யனின் தனியனாக, ஸ்லோகமாகி விட்டது.
அன்று முதல் இன்றுவரை எங்கெல்லாம் பிரபந்தம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் தென்கலை வைஷ்ணவ பக்தர்களால் முதலிலும் முடிவிலும் இந்த ஸ்லோகம் சொல்லப்படுகிறது.
பிரபந்தம் கேட்டவாறே தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில், மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார். அவரது பூத உடலை பத்மாசன கோலத்தில் அமர்த்தி சிஷ்யகோடிகள் காவிரிக்கரைக்கு ஒரு புஷ்ப பல்லக்கில் பக்தியுடன் சுமந்து ஒரு சந்யாசிக்குறிய முறையில் அந்திமக்ரியைகள் செய்தனர்.
அந்த புனித இடம் இன்றும் அவரது பொற்பாதுகை கொண்ட க்ஷேத்ரமாக போற்றி வணங்கப்படுகிறது. மணவாள மாமுனிகளைப் பற்றி இன்னும் நிறையவே சொல்ல வேண்டியிருக்கிறது. அவற்றை வேறொரு கட்டுரையில் விளக்குகிறேன்.
No comments:
Post a Comment